Last Updated : 08 Jun, 2017 08:34 AM

 

Published : 08 Jun 2017 08:34 AM
Last Updated : 08 Jun 2017 08:34 AM

டிடிவி தினகரனுடன் மேலும் 5 எம்எல்ஏக்கள் சந்திப்பு: ஆதரவு எண்ணிக்கை 32 ஆக உயர்வு

அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனை மேலும் 5 எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி. தினகரனை அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கடந்த 2 நாட்களாக சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 27 எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்), பி.பெரியபுல்லான் (எ) செல்வம் (மேலூர்), பி.நீதிபதி (உசிலம்பட்டி), பி.எம்.நரசிம்மன் (திருத்தணி), எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி) ஆகியோர் தினகரனை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

தினகரனை சந்தித்த பிறகு நிருபர்களிடம் பேசிய ஏ.கே.போஸ், ‘‘அதிமுகவில் இருந்து தினகரனை ஒதுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது. கட்சியில் யார் இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்று முடிவெடுக்கும் அதிகாரம் அமைச்சர்களுக்கு இல்லை. கட்சிப் பிரச்சினைகளில் அமைச்சர்கள் கவனமாக பேச வேண்டும். அதிமுகவில் சிறுசிறு பிரச்சினைகள் உள்ளது உண்மைதான். பிளவு எதுவும் இல்லை. அதிமுகவில் ஜெயலலிதா அணி என்ற ஒரே அணிதான் உள்ளது. 2021 வரை அதிமுக ஆட்சி நீடிக்கும். முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக செயல்பட மாட்டோம். சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை விவாதங்களின்போது அரசுக்கு ஆதரவாக இருப்போம்’’ என்றார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆம்பூர் பாலசுப்பிரமணி யன் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் நேற்றும் தினகரனை சந்தித்துப் பேசினர். நடிகை விஜயசாந்தியும் நேற்று முன்தினம் தினகரனை சந்தித்துப் பேசினார்.

அதிமுகவில் அடுத்தடுத்து நடந்து வரும் திருப்பங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரனை சந்தித்த எம்எல்ஏ ஒருவரிடம் பேசியபோது, ‘‘பழனிசாமி அரசை கவிழ்க்கும் எண்ணத்தில் தினகரன் இல்லை. தற்போது சூழ்நிலை சாதகமாக இல்லாததால் பொறுமையாக இருக்கவே விரும்புகிறார். பழனி சாமி அரசுக்கு எதிராக செயல்பட வேண்டாம். சில மாதங்களுக்கு அமைதி காப்போம் என எங்களிடம் தெரிவித்தார்’’ என்றார்.

புதுச்சேரி எம்எல்ஏக்களும் ஆதரவு

புதுச்சேரியில் அதிமுகவுக்கு அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகிய 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து கட்சியில் பல்வேறு மாற்றம் ஏற்பட்டாலும் புதுச்சேரி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தரப்பில் ஒரே கருத்துடன் நீடித்து வந்தனர்.

தற்போது தமிழகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களில் சிலர் டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலை யில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவர் அன்பழகன் தலைமையில் 4 எம்எல்ஏக்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “அதிமுகவில் பிளவு இல்லை. கட்சியை பொருத்தவரை பொதுச் செயலாளர் சசிகலா துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். இவர்கள் தலைமை யில்தான் புதுச்சேரி அதிமுக இயங்குகிறது. புதுச்சேரியில் உள்ள 4 எம்எல்ஏக்களும் தினகரனுக்கு முழு ஆதரவை தெரிவிக்கிறோம்” என்று கூறினர்.

முதல்வர் பழனிசாமிக்கு ஓபிஎஸ் ஆதரவு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு வந்திருந்தார். நேற்று மதியம் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் ஆட்சிக்கு எங்கள் அணி மூலம் எந்த ஆபத்தும் இருக்காது. தேவையெனில் அவரது ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பை தருவோம் என்றார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு என்ற அவரது நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேட்ட மற்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஓ.பன்னீசெல்வத்தின் இந்த திடீர் அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x