

அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் வி.நகாசிஸ். பிறப்பால் அமெரிக்கரான இவர், தனது மானுடவியல் ஆராய்ச்சிப் படிப்புக்காக 2004-ம் ஆண்டு மதுரையில் சில ஆண்டு கள் தங்கி இருந்தார். அப்போது தமிழ் மொழி மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தமிழ் கற்றுள்ளார். தமிழ் திரைப்படங்கள் குறித்து ஏராளமான ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளார். இதுவரை தமிழகத் தில் தான் மேற்கொண்ட ஆராய்ச்சி கள், அனுபவங்கள் அடிப்படை யில் பல்வேறு கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.
தற்போது ‘டூயிங் ஸ்டைல்: யூத் அண்ட் மாஸ் மீடியேஷன் இன் சவுத் இந்தியா’(Doing Style: Youth and Mass Mediation in South India) என்ற தலைப்பில் 336 பக்கங்கள் கொண்ட ஆங்கில நூல் ஒன்றை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை சிகாகோ பல்கலைக்கழகமும், ஓரியண்டல் பிளாக்ஸ் வேன் பதிப்பகமும் அண்மையில் வெளியிட்டன.
அமெரிக்காவைச் சேர்ந்த நகாசிஸ், தனது புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியிருப்பது புத்தகத்தின் தனிச் சிறப்பாகும். புத்தகத்தின் அட்டையில் ரஜினி யின் பழைய, புதிய புகைப் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அட்டையில் தொடங்கி பெரும் பாலான பக்கங்களில் தமிழக இளைஞர்களின் வாழ்க்கை முறைகளை விவரிக்கும் போது ரஜினியின் தனிச் சிறப்புகளுடன் ஒப்பிட்டுள்ளார்.
புத்தகத்தில் முன்னுரை, முகவுரை தவிர்த்து மொத்தம் 6 பகுதிகள் உள்ளன. அதில் 6-வது பகுதி இளைஞர்களின் ஸ்டைல் பற்றியது. அந்த பகுதியில் பெரும்பாலான பக்கங்களை நடிகர் ரஜினியே ஆக்கிரமித்துள்ளார். அதில் ரஜினியின் ஒவ்வொரு ஸ்டைல்களையும் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை, பாண்டியன், படையப்பா, பாட்ஷா, வேலைக் காரன், சிவாஜி ஆகிய திரைப் படங்களில் இடம்பெற்றுள்ள ரஜினியின் தோற்றம், வசனங்கள், பாடல் வரிகள், பஞ்ச் டயலாக், ரஜினியை பின்பற்றும் நடிகர்கள் என அவர் தொடர்பான முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் ரஜினியின் ‘கபாலி’ திரைப்படம் வெளியான தினத்தன்று நகாசிஸ் மதுரையில் இருந்தார். முதல் நாள் முதல் காட்சியில் ‘கபாலி’யை தனது செல்ல மகளுடன் பார்த்துவிட்டு திரும்பியவரை நேரில் சந்தித்தோம்.
புத்தகம் குறித்து ‘தி இந்து’விடம் நகாசிஸ் கூறியதாவது:
ரஜினியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது ‘பாட்ஷா’ படத்தை பலமுறை பார்த்து ரசித் துள்ளேன். ஸ்டைல் என்றால் அது ரஜினிதான். கல்லூரி மணவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களி லும் பின்பற்றும் பழக்க வழக்கங் களைப் புத்தகத்தில் தெரிவித் துள்ளேன். இளைஞர்களின் ஸ்டைலைக் குறிப்பிடும்போது முதலில் வருபவர் ரஜினி தான்.
படையப்பா படத்தில் ரஜினி நிறைய சைகையைக் காட்டி இருப்பார். அவரது சைகை குறித்து தனியாகக் கட்டுரை எழுதி வருகிறேன். தமிழ் சினிமா தொடர்பாக தனியாக புத்தகம் எழுதி வருகிறேன். அந்தப் புத்தகத் தில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித்தின் மங்காத்தா, சுப்ரமணியபுரம், கோவா ஆகிய படங்களுக்கு அதிக பக்கங்கள் ஒதுக்குவேன் என்றார்.
கபாலி படம் குறித்து கேட்ட போது, “முள்ளும் மலரும், பைரவி ரஜினியையும், தற்போதைய ரஜினியையும் கலந்து கபாலியை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். படத்தை பலமுறை பார்க்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.
பேராசிரியர் பணியுடன் சிகாகோ தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் நகாசிஸ். பேரவையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் நடத்தி, தமிழில் புலமை பெற்ற அமெரிக்க, இந்திய தமிழ் அறிஞர்களைக் கவுரவித்து வருவது குறிப்பிடத் தக்கது.