விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
Updated on
2 min read

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், ''மத்திய-மாநில அரசுகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் விவசாயப் பெருங்குடி மக்களை பாதுகாத்து அவர்களின் உரிமைகளை மீட்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் மூலம் திமுக முன்னெடுத்த முழுஅடைப்பு போராட்டம் அனைத்துக் கட்சித் துணையுடனும், பலதரப்பு மக்களின் ஆதரவுடனும், திமுக தொண்டர்கள் மற்றும் நம்முடன் தோள் நிற்கும் கட்சிகளின் தொண்டர்களின் பங்களிப்புடனும் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு வேளாண் மண்டலம் அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட விவசாயிகள் சார்ந்த கோரிக்கைகளுடன் குடிநீர்ப் பஞ்சத்தை போக்குதல், நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குதல், மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தே இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஏறத்தாழ 65 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ-ஷேர் ஆட்டோ-மினி பஸ்-தனியார் பேருந்துகள் உள்ளிட்டவை இயங்கவில்லை. தனியார் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் கூட குறைந்த அளவில் இயங்கின. அதிலும் கூட பயணிகள் எண்ணிக்கை குறைவே. தலைநகரமான சென்னை, தமிழ் நகரமான மதுரை, பின்னலாடை தொழில் சிறந்துள்ள திருப்பூர், நூற்பாலைகள் நிறைந்த கோவை மற்றும் திருச்சி, நெல்லை, சேலம், வேலூர் என அனைத்து நகரங்களிலும் முழு அடைப்புப் போராட்டத்தின் முழுமையான வெற்றியைக் காண முடிந்தது.

டெல்டா மாவட்டத்திற்குட்பட்ட தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூரில் திமுக தோழர்களுடனும் தோழமைக் கட்சி நிர்வாகிகளுடனும் முழு அடைப்புப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, மாபெரும் பேரணியாக அது மாறியது.

பொதுமக்களின் பங்கேற்புடன், விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்தபடி கைதானோம். அந்த நேரத்தில் தோழமைக் கட்சித்தலைவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, விவசாயிகளுக்காகவும் பொதுமக்களுக்காகவும் குரல் உயர்த்தி மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்தனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, இந்திய சமூக நீதி இயக்கம், அகில இந்திய பார்வர்டு பிளாக், எம்.ஜி.ஆர். கழகம், ஆதித் தமிழர் பேரவை, திராவிட இயக்க தமிழர் பேரவை, உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ்மாநில தேசிய லீக், பார்வர்டு பிளாக் (வல்லரசு), சமத்துவ மக்கள் படை, சமத்துவ மக்கள் கழகம், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், இந்திய தேசிய லீக், நமது கொங்கு முன்னேற்றக் கழகம் என இந்த முழு அடைப்புப் போராட்டத்தின் வெற்றிக்குத் துணை நின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் என் இதயமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழக நிர்வாகிகள்-தொண்டர்கள், தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள்-தொண்டர்கள் என 1லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறியல்-ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்தப் போராட்ட வெற்றியில் அவர்களின் மகத்தான பங்கினை உணர முடிகிறது. இயக்கங்களின் அடித்தளமாக விளங்கும் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வணிகப் பெருமக்கள் இந்தப் போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்துள்ளனர். மே 5-ம் தேதி வணிகர் தினத்தையொட்டி கடையடைப்பு செய்ய வேண்டிய அவசியம் உள்ள நிலையிலும், விவசாயிகள் நலன் கருதி இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்று கடைகளை அடைக்கச் செய்து ஆதரவு தெரிவித்த வணிகர் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து வணிகர் அமைப்பினருக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

போராட்டத்தில் பெருமளவு பங்கேற்ற போக்குவரத்து தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அவர்கள் சார்ந்துள்ள தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் என் உளமார்ந்த நன்றி. திரைத்துறையின் நடிகர் சங்கம், பெப்சி அமைப்பு, தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்டவர்கள் அளித்த ஒத்துழைப்பிற்கும் என் மனப்பூர்வமான நன்றி.

டெல்லியில் 40 நாட்களுக்கு மேல் தங்கள் அவல நிலையை விளக்கும் பல்வேறு வகையானப் போராட்டங்களை நடத்தியும், பிரதமரை சந்திக்க முடியாமலும் மத்திய அரசின் உறுதிமொழியைப் பெறமுடியாமலும் சென்னை திரும்பிய அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள், எழும்பூர் ரயில் நிலையத்திலேயே நம்முடைய முழுஅடைப்புப் போராட்டத்தில் பங்கேற்று, இந்தப் போராட்டம் யாருக்கானது என்ற உண்மை நிலையை மத்திய-மாநில அரசுகளுக்கும், இதனை வெறும் அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்ப்பவர்களுக்கும் உணர்த்தியிருக்கிறார்.

மக்களின் பேராதரவுடன் முழு அடைப்புப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்ற அதே நாளில், திமுகவின் சார்பில், நெடுஞ்சாலைகளை வரைமாற்றம் செய்து டாஸ்மாக் கடைகளைத் திறக்க நினைக்கும் மாநில அரசின் திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ''நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை 3மாதங்களுக்குத் திறக்கக் கூடாது'' என்ற தடையுத்தரவு பிறக்கப்பட்டிருப்பது இந்தப் போராட்ட நோக்கங்களில் ஒன்றுக்கு கிடைத்துள்ள சட்டபூர்வமான வெற்றியாகும்.

வெற்றி பெறவேண்டிய கோரிக்கைகள் நிறைந்துள்ளன. அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்குமானவை. மக்கள் நலன் காக்க திமுகவும் தோழமைக் கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளன. மத்திய-மாநில அரசுகளின் வாயிலாக இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நம்முடைய அடுத்தடுத்த போராட்ட வழிமுறைகள் ஜனநாயக நெறிப்படி தொடரும். மக்கள் நலன் காக்க ஒன்றிணைந்து போராடுவோம். அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in