Last Updated : 20 Aug, 2016 01:47 PM

 

Published : 20 Aug 2016 01:47 PM
Last Updated : 20 Aug 2016 01:47 PM

தனிகுடும்பமாக வாழ்பவர்களுக்கு தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது: விழுப்புரம் மாவட்ட சமூக நல அலுவலர் கருத்து

பெண்களை விட ஆண்களே அதிக அளவில் தற்கொலைக்கு முயல்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். இந்தியாவில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நடக்கிறது.

2012-ம் ஆண்டில் இந்தியாவில்தான் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்ந்தன என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அந்த ஆண்டில் 2,58,075 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 1,58,098 பேர் ஆண்கள். 99,977 பேர் பெண்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த இடத்தை விட்டு இந்தியா நகர்ந்தாலும் இன்னும் அதிக அளவில் தற்கொலைகள் நம் தேசத்தில் தொடர்கின்றன.

ஆண்கள் உடல் உறுதியிலும், பெண்கள் மன உறுதியிலும் பலமானவர்கள் என்கிறது உளவியல். ஆனாலும் பெண்களின் தற்கொலைகளும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இம்மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு நாளில் இரு பெண்கள் தங்களின் குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்றுள்னர்.

செஞ்சி அருகே தேவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி பரமேஸ்வரி தன் கணவரின் குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த முயன்று முடியாததால் கார்த்திக் என்கிற 4 மாத கைக்குழந்தை, கார்த்திகா என்கிற ஒன்றரை வயது மகளுடன் கிணற்றில் குதித்தார். குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். ஆனால் பரமேஸ்வரி உயிர் பிழைத்துள்ளார்.

அதே நாள் மாலை திண்டிவனம் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாந்த குமார் என்பவர் மனைவி மேனகா என்பவர் சின்ன நெற்குணம் கிராமத்தில் உள்ள காப்பகத்தில் இருந்த மனவளர்ச்சி குன்றிய தன் மகன் புருஷோத்தமன், மகள் ஷர்மிளாவுடன் கிணற்றில் குதித்ததில் இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். மேனகா உயிர்பிழைத்தார்.

முதல் தற்கொலை முயற்சி கணவரின் குடிபழக்கத்தாலும், இரண்டாவது தற்கொலை முயற்சி மகனின் மனவளர்ச்சி குறைபாட்டாலும் நிகழ்ந்துள்ளது. இரண்டு பெண்களும் குடும்பத் தலைவிகள். இருவரும் வேலைக்குச் செல்லாதவர்கள். அதிகம் படிக்காதவர்கள். கணவரையும், உறவினர்களையும் சார்ந்து வாழ்பவர்கள்.

இதேபோல் திருக்கோவிலூர் அருகே அரும்பட்டு கிராமத்திலும் ஒரு விபரீதம் நடந்துள்ளது.

இவர்கள் இப்படிப்பட்ட விபரீத முடிவுக்கு வருவதற்கு என்ன காரணம்?

விழுப்புரம் மாவட்ட சமூக நல அலுவலர் லலிதாவிடம் கேட்டோம். அவர் கூறியது:

ஒவொரு தற்கொலைகளுக்கும் ஒவ்வொரு விதமான சமூக, பொருளாதார, உளவியல் காரணங்கள் இருக்கின்றன.

பெரும்பாலும் தனி குடும்பமாக வாழும் பெண்களே தற்கொலைக்கு முயல்கிறார்கள். அதிலும் குறிப்பாக காதல் திருமணம் செய்துகொள்பவர்களே தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு உறவினர்களின் ஆதரவு கிடையாது. கணவர் மட்டுமே ஆதரவு. கணவரின் தகாத நடவடிக்கைகளான வேறு பெண்களுடன் உறவு, மதுப்பழக்கம் உள்ளிட்ட பழக்கவழக்கங்களை தடுக்க முடியாமல் தற்கொலைக்கு முயல்கிறார்கள். குழந்தையை விட்டு செல்ல மனமில்லாமல் அவர்களை கொன்று தானும் சாக முடிவெடுக்கிறார்கள்.

மனம் விட்டு பேச, ஆலோசனை பெற இயலாதவர்களே இப்படிப்பட்ட முடிவுக்கு வருகிறார்கள். கூட்டுக் குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்து இயங்குவதாலும், உறவினர்களோடு நெருக்கமில்லாததாலும் பெண்களிடையே இந்த ஒரு புதியவகை மனஅழுத்தம் வந்திருக்கிறது. கணவனுடன் ஏற்படும் பிரச்சினைகளை தனித்து கையாள முடியாமல் போகும் போது அவர்கள் தற்கொலை என்கிற நொடிப் பொழுது முட்டாள்தனத்தை கையில் எடுக்கிறார்கள்.

கணவன், மனைவி தகராறு எப்படியும் அக்கம் பக்கம் வசிப்பவர்களுக்கு தெரியும். அப்படி தெரியவரும்போது ஒன்றிய அளவில் உள்ள சமூக நல அலுவலரிடம் தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க தயாராக இருக்கிறோம். இல்லையெனில் அருகில் உள்ள மகளிர் காவல் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவற்றில் தெரிவித்தால் அவர்கள் மூலம் எங்களுக்கு தெரியவரும். உடனடியாக அப்பெண்களிடம் பேசி அவர்களின் பிரச்சினையை கேட்டு அதற்கு ஏற்ப வழிகாட்ட தயாராக உள்ளோம் என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுதொடர்பாக ஏதேனும் விவரம் வேண்டுவோர் 04146-222288 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் சமூக நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

தேவை தற்கொலை தடுப்பு மையங்கள்

மனச்சிதைவு நோயால் ஒருவருக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை போக்க குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் முக்கியத் தேவை. சென்னை, ராயப்பேட்டையிலுள்ள சிநேகா தற்கொலை தடுப்பு மையம் (044 - 2835 2345) போல, பெண்களின் பிரச்சினைகளை கணிவாக கேட்டு தகுந்த ஆலோசனை கூற, சைல்டு லைன் 1095 மாதிரியான ஒரு தொலைபேசி எண்ணை உருவாக்க அரசு முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x