

இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் முள்ளுவாடியில் ரயில்வே மேம்பால கட்டுமான பணியை தடுத்ததாக இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் உள்ளிட்ட 3 பேரை கடந்த 8-ம் தேதி சேலம் டவுன் போலீஸார் கைது செய்தனர். இதில் பியூஸ் மானுஷ் தவிர மற்ற இருவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பியூஸ் மானுஷூக்கு மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்கக்கோரி அவரது மனைவி மோனிகா, சேலம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பியூஸ் மானுஷ் எந்தவொரு போராட்டத்தையும் முறையான அனுமதி பெறாமல் நடத்தியுள்ளார். தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், போராட்டங்களை நடத்தியதாக அவர் மீது 4 வழக்குகள் உள்ளன என கூறி அரசு வழக்கறிஞர் தனசேகரன், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
விசாரித்த நீதிபதி சேஷசாயி, பியூஸ் மானுஷ், தினம் காலை மற்றும் மாலையில் சேலம் முதலா வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும். இரு நபர் உத்தரவாதத்துடன் ரூ.10 ஆயிரம் பிணையத்தொகை யும், சாட்சிகளை கலைக்கக் கூடாது. போலீஸார் விசா ரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் 3 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.