

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொறுப்புகளில் இருந்து வாசன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தலைவர் விஜய் இளஞ்செழியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளஞ்செழியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையின் அறிவுறுத்தல்படி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பி.எஸ்.பழனி, அனுராதா, விக்டரி ஜெயக்குமார், சத்யா ஆகியோர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
மேலும் மத்திய சென்னை, திருவள்ளூர், நாமக்கல், தஞ்சாவூர், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 8 நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்களும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள அனைவரும் நேற்று முன்தினம் வாசன் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
அடுத்து.. மாணவர் அணி
இந்நிலையில், காங்கிரஸ் மாணவர் அணியில் தற்போது நிர்வாகிகளாக இருக்கும் வாசன் ஆதரவாளர்கள் கூட்டம் வாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் மாணவர் அணி நிர்வாகிகள் மீதும் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது