

அனைத்து கட்சிகளின் கருத்தொற்றுமையின் அடிப்படையில் சரக்கு - சேவை வரி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா நீண்ட காலத்துக்கு முன்னதாகவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் மாநிலங்களவையில் ஒப்புதலைப் பெற வேண்டிய நிலையில் இன்னும் நிலுவையில் உள்ளது.
மாநிலங்களவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெற வேண்டிய கட்டாயமான சூழல் உள்ளது. இம்மசோதா தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உண்மையே.
மத்திய பாஜக அரசு, பொருட்கள் மற்றும் சேவை வரி (வரைவு) சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற எடுக்கும் முயற்சியில், கீழ்காணும் வழிமுறைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இம்மசோதாவின் நிறைவேற்றத்தால், மக்களின் வரிச்சுமை எவ்விதத்திலும் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். இது நிறைவேற்றப்பட்டு சட்டமாகி அமுல் ஆனால் கிடைக்கும் வருவாயில், நியாயமான பங்கு மாநிலங்களுக்கும் கிடைக்க வழி வகுக்கப்பட வேண்டும். இச்சட்டத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் உடனடி வரி இழப்பை, ஈடு செய்வதற்கு மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்கிப் பாதுகாக்க வேண்டும்.
இச்சட்டத்தின் மூலம் அன்னிய முதலீடு என்ற பெயரில் அளவற்ற சலுகைகளை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் போது, தேசிய நிறுவனங்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது. இம்மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளின் கருத்தை கேட்டறிந்து, கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும்.
எனவே, மக்கள் நலனை மட்டுமே கவனத்தில் கொண்டு, பொருட்கள் மற்றும் சேவை வரி (வரைவு) சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு வேண்டிய அனைத்து நல்ல முயற்சிகளிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.