Published : 15 Apr 2017 08:01 AM
Last Updated : 15 Apr 2017 08:01 AM

சித்திரை திருவிழாவுக்கு தயாராகும் மதுரை: கள்ளழகர் வைகையில் இறங்கும்போது தண்ணீர் திறப்பதில் சிக்கல்

திருவிழாக்களின் தலைநகரான மதுரையில் சித்திரைத் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.

சித்திரைத் திருவிழா மதுரையின் அடையாளமாகவும், அந்த ஆண்டுக்கான கிராம மக்களுடைய வளமையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. வைகை ஆற்றில் இறங்கும்போது அழகர் உடுத்தும் பட்டு உடையின் நிறம் கொண்டே அந்த ஆண்டின் வளமையின் குறியீடாக மக்கள் பார்க்கும் முக்கியத்துவம் கொண்ட திருவிழாவாகக் கருதப்படுகிறது. சைவத்தையும் (மீனாட்சியம்மன் கோயில்), வைணவத்தையும் (அழகர் கோயில்) இணைக்கும் விழாவாக இந்த சித்திரைத் திருவிழா மக்களின் ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விழாவாகவும் கொண்டாடப்படுவதால் உலக அளவில் பிரசித்தி பெற்றது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மே 5-ம் தேதி பட்டாபிஷேகம், 6-ம் தேதி திக்விஜயம், 7-ம் தேதி திருக்கல்யாணம், 8-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 6-ம் தேதி தொடங்குகிறது. கள்ளழகர் மே 8-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டு மறுநாள் 9-ம் தேதி அதிகாலையில் மூன்றுமாவடி அருகே எதிர்சேவையில் அருள்பாலிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் மே 10-ம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரள்வர். பக்தர்கள், கள்ளழகர் வேடத்தில் அதற்கான தோப்பரை ஆடை அணிந்து உருமா தலைக்கட்டு அணிந்து ஆடிப்பாடி கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சியடித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இந்த சித்திரைத் திருவிழாவை வரவேற்கும் வகையில் மதுரையில் அதற்கான விழா ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. மதுரை புதுமண்டபத்தில் சல்லடம் ஆடைகள், தலைக்கட்டு உருமா, தண்ணீர் பீச்சியடிக்கும் தோப்பரை பைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மீனாட்சியம்மன் கோயில் பிரகாரங்களில் தோரணங்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து புதுமண்டபத்தை சேர்ந்த சல்லடம் ஆடை தயாரிப்பாளர் ராஜாங்கம் கூறியதாவது: இந்த ஆண்டு கிராமங்களில் வறட்சி காரணமாக ஆர்டர்கள் அதிகமாக வரவில்லை. வெல்வெட், சாலட்டின் துணிகளை பொறுத்து சல்லடம் ஆடைகள் விலை வேறுபடுகிறது. ஒரு ஆடை 750 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரை விற்கப்படும். தலைக்கட்டு உருமா ரூ.1000-க்கு விற்கப்படுகிறது என்றார்.

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு வைகை ஆற்றில் ஓரளவு தண்ணீர் இருந்ததால் கடைசி நேரத்தில் கள்ளழகருக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் வரவில்லை. அணையிலும் குடிநீருக்கே தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால், கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x