

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், சோழிங்கநல்லூரில் ரூ.380 கோடி செலவில் முன்கட்டுமான தொழில்நுட்பத்தில் 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதன்படி, சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் இணைப்புச் சாலையில் பிருத்தியங்கரா தேவி கோயில் அருகே 80 அடி சாலையோரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில 1500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.
கார் நிறுத்தும் இடம் உள்பட 11 தளங்கள் கட்டப்படுகின்றன. உயர் வருவாய் பிரிவினருக்கு 120 வீடுகளும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு 500 வீடுகளும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு 880 வீடுகளும் கட்டப்படவுள்ளன.
உயர் வருவாய் பிரிவில் 1267 சதுர அடியில் 3 படுக்கை அறை வீடு விலை ரூ.58 லட்சத்து 80 ஆயிரம். நடுத்தர வருவாய் பிரிவில் 879 சதுர அடி முதல் 885 சதுர அடி வரை உள்ள இரண்டு படுக்கையறை வீடு விலை ரூ.40 லட்சத்து 89 ஆயிரம் மற்றும் ரூ.40 லட்சத்து 97 ஆயிரம். குறைந்த வருவாய்ப் பிரிவில் 627 சதுர அடியில் ஒரு படுக்கையறை வீடு விலை ரூ.26 லட்சத்து 37 ஆயிரம். தனியார் கட்டுமான நிறுவனங்கள் கட்டித்தரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒரு சதுர அடி விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5,500 என இருக்கையில், இங்கு ஒரு சதுர அடி விலை ரூ.4,600 மட்டுமே.
லிப்டு, ஜெனரேட்டர், பவர் பேக்கப், சுற்றுச்சுவர், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, பூங்கா, கிளப் ஹவுஸ், உள் விளையாட்டரங்கம், குடியிருப்போர் சங்க அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ.) விதிமுறை களின்படி செய்து தரப்படுகிறது.
30 முதல் விண்ணப்பம்
வீடுகள் ஒதுக்கீட்டில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும். குலுக்கல் முறையில் ஒதுக்கீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர்.
இதற்கான விண்ணப்பம், அடையாறு பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பெசன்ட் நகர் கோட்ட அலுவலகத்தில் வரும் 30-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு
பிப்ரவரி 19-ம் தேதி வரை விற்கப்படுகிறது. விண்ணப்பம் சமர்ப்பிக்க பிப்ரவரி 20 கடைசி நாள். மார்ச் மாத இறுதியில் குலுக்கல் நடை பெறுகிறது.
ஒன்றரை ஆண்டில் வீடு கிடைக்கும்
இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “சோழிங்கநல்லூரில் 1,500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானப் பணி அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கும். நவீன தொழில்நுட்பத்தில் கட்டுவதால் ஒன்றரை ஆண்டுகளிலேயே கட்டி முடிக்கப்படும். அதன்படி, 2016-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு முன்பே 1,500 வீடுகளும் ஒதுக்கீடுதாரர்களுக்கு வழங்கப்படும்” என்றார்.