

கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலை வர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜெ.விஜய் இளஞ்செழியன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் தோல் விக்கு பொறுப்பேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஜூன் 14-ம் தேதி இளங்கோவன் ராஜினாமா செய்தார். இதுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவாளர்களும், இளங்கோவன் ஆதரவாளர்களும் தனித்தனியாக சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து ஆலோசனை கூட்டம் நடத்துவதும், அறிக்கை விடுவதுமாக இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் பகல் 1 மணிக்கு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விஜய் இளஞ்செழியனும், நிர்வாகி களும் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். இளைஞர் காங்கிரஸுக்கு தனி அலுவலகம் வேண்டும் எனக் கூறி ஊடகப் பிரிவுக்கென ஒதுக்கப்பட்ட அறையின் சாவியை அலுவலக மேலாளரிடம் கேட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து அங்கு வந்த இளங்கோவன், ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் இளஞ்செழியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பையும் அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் சமாதானப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், இளங்கோவன் உள்ளிட்டோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் விஜய் இளஞ்செழியன் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியை சந்திப்பதற்காக சத்தியமூர்த்தி பவனில் காத்திருந்தோம். அறைகளை பார்வையிட சாவி இருக்கிறதா என மேலாளரிடம் கேட்டோம். அவர் இல்லை எனக் கூறவே அங்கு ஆலோசனையில் ஈடுபட்டிருந்தோம்.
அப்போது அங்கு வந்த முன்னாள் மாநிலத் தலைவர் இளங்கோவன், என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். வீட்டுக்கு வந்து தாக்குவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். ஆ.கோபண்ணா, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரங்கபாஷ்யம், கடல் தமிழ்வாணன், பொன்.மனோகர், சீனிவாச மூர்த்தி, மதுசூதனன் ஆகியோரும் என்னை மிரட்டினர். எனவே, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இளங்கோவன் மீது இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவரே கொலை மிரட்டல் புகார் தெரிவித்திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விஜய் இளஞ்செழியனிடம் கேட்டபோது, ‘‘இளங்கோவன் நடந்து கொண்ட விதம் குறித்து இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா பிராரிடம் புகார் தெரிவித்தோம். அவரது வழிகாட்டுதலின்படியே இளங்கோவன் உள்ளி்ட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.
ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணாவிடம் கேட்ட போது, ‘‘விஜய் இளஞ்செழியனும், அவருடன் வந்தவர்களும் ஊடகப் பிரிவு அலுவலக அறையின் பூட்டை உடைக்க முற்பட்டனர். அதைத்தான் இளங்கோவன் தட்டிக்கேட்டார். வேண்டுமென்றே காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் புகார் கொடுத்துள்ளனர்’’ என்றார்.
இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா பிராரிடம் புகார் தெரிவித்தோம். அவரது வழிகாட்டுதலின்படியே இளங்கோவன் உள்ளி்ட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளோம்