தமிழக அரசு ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் திடீர் விலகல்?
தமிழக அரசு ஆலோசகர் பொறுப் பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று விலகியுள்ளதாக கூறப்படு கிறது.
தமிழகத்தில் 41-வது தலைமைச் செயலாளராக கேரளத்தை சேர்ந்த ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் 1976-ம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவராவார். அவரது பதவிக்காலம் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச்சில் முடிவடைந்தது.
தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களை ஷீலா பாலகிருஷ்ணன் நன்கு அறிந்தவர் என்பதால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இவரை தமிழக அரசு ஆலோசகராக நியமித்தார். இதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் ஜெயலலிதா மறைந்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பிறகும் அவர் அந்த பதவியில் இருந்து வந்தார்.
தற்போது வரும் மார்ச் மாதம் வரையில் அவருக்கு பதவிக் காலம் இருக்கிறது. இந்நிலையில் நேற்று அவர் திடீரென பதவி விலகுவதாகவும், இதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரையில் தமிழக அரசு தரப்பில் இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.
