

ஜெயலலிதாவை பாராட்டிப் பேச எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டதால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தனது பேச்சின் தொடக்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவை வெகுவாக புகழ்ந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து பேசிய அமைச்சர், ‘‘எங்களை ஆளாக்கி இந்த இடத்தில் அமர வைத்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிப் பேசாமல் யாரைப் பற்றி பேசுவது. திமுக உறுப்பினர்கள் தங்கள் தலைவரைப் பற்றி மட்டுமல்ல அவரது பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன்களை பாராட்டிப் பேசுகின்றனர். அப்போதெல்லாம் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். ஆனால், நாங்கள் பேசும்போது எதிர்த்து கூச்சல் போடுகிறீர்கள். இதுதான் திமுகவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடா?’’ என கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர், ‘‘முதல்வரை புகழ்ந்து அமைச்சர் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை. திமுக உறுப்பினர்கள் தேவையில்லாமல குறுக்கிடக் கூடாது’’ என கண்டனம் தெரிவித்தார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கே.என்.நேரு, திமுக தலைவர் கருணாநிதியை புகழ்ந்து பேசத் தொடங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அவர்களை அமைதிப்படுத்திய பேரவைத் தலைவர், ‘‘முதல்வரை பாராட்டிப் பேசும்போது திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்போது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்’’ என்றார்.
இதனால் பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.