

சென்னை அரசு பொது மருத்துவ மனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குண மடைந்த இளம் பெண்ணை சுகா தாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் சந்தித்து நலம் விசாரித் தார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந் தவர் ரிஹானா பேகம் (20). கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி இவருக்கு சென்னை அரசு பொது மருத்துவ மனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் மூலம் தானமாக கிடைத்த இதயத்தை, இதய அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் ஷஷாங்க், பேராசிரியர் நா.நாகராஜன், மயக்கவியல் துறை இயக்குநர் கலா, பேராசிரியர் எம்.வெள்ளிங்கிரி உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் மாற்று அறுவை சிகிச்சை மூலம் இளம் பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.
இதுபற்றி மருத்துவமனை டீன் எம்.கே.முரளிதரன் கூறுகையில், “தனியார் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் வரை செலவாகும் இதய மாற்று அறுவை சிகிச்சை, சென்னை அரசு பொது மருத்துவ மனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப் பட்டது” என்றார். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று மருத்துவ மனைக்கு வந்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த இளம் பெண்ணை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) விமலா, மருத்துவமனை டீன் எம்.கே. முரளிதரன் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.