Published : 17 Nov 2014 04:02 PM
Last Updated : 17 Nov 2014 04:02 PM

மக்களை பாதிக்காத வகையில் மின் கட்டண நிர்ணயம்: அமைச்சர் உறுதி

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில், ஏழை எளிய மக்கள், எந்தவிதத்திலும் பாதிப்படையாத வகையில் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குழுவில் மின் கட்டணம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றள்ளதை சுட்டிக் காட்டி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இன்றி திங்கள்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், "மின் கட்டண நிர்ணயக் கொள்கை குறித்து தற்போதைய பாரதிய ஜனதா அரசின் கொள்கை மற்றும் முந்தைய பாரதிய ஜனதா அரசின் கொள்கை பற்றியும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு தெரியவில்லை போலும்! எனவே, அது குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு தெளிவுபடுத்துவது எனது கடமை என கருதுகிறேன்.

மின்சார ஒழுங்குமுறைச் சட்டம் 1998 என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சில சலுகைகளை அன்றைய பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது. ஒரு சில நன்மைகளை பெறுவதற்கு கடினமானவைகளை ஏற்றுக் கொள்வது போல, அன்றைய மத்திய பாரதிய ஜனதா அரசு சில சலுகைகளை அறிவித்து அதன் மூலம் மின்சார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை ஏற்றுக் கொள்ள தூண்டியது.

அப்போது தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது தான் மத்திய அரசிடமிருந்து புதிய திட்டத்தின் கீழ் முன்பணமாக நிதியைப் பெற்றது. இதற்காக மத்திய அரசோடு ஓர் ஒப்பந்தம் போடுவதாக அன்றைய திமுக அரசு ஒப்புக் கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் படி மின்சாரத் துறையில் பல சீர்திருத்தங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. அதாவது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற ஆணையத்தை அமைப்பது, மின் கட்டணங்களை திருத்தி அமைப்பதற்கான விண்ணப்பத்தை அதாவது டாரிஃப் ரிவிஷன் பெட்டிஷன் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முன் தாக்கல் செய்வது, அதன் அடிப்படையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணங்களை நிர்ணயம் செய்வது என எல்லாவற்றிற்கும் ஒப்புதல் அளித்தது.

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படக்கூடாது எனக் கூறும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு மின் உற்பத்திக்கான இடுபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருவது தெரியுமா? தெரியாதா?

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்த பிறகு நிலக்கரிக்கானத் தீர்வையை டன் ஒன்றுக்கு ரூ.51.50லிருந்து ரூ.103/-ஆக 11.07.2014 முதல் உயர்த்தியுள்ளது.

மின்சார வாரியம் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு 2014-15 ஆம் ஆண்டில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ளபடி 2.5 சதவீதம் சுங்கவரியும், 2 சதவீதம்-ம் மத்திய அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்.

மேலும், தமிழகத்திலுள்ள அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை கொண்டு வருவதற்கான ரயில்வே கட்டணத்தையும் 2014-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 6.5 சதவீதம் உயர்த்தியுள்ளது.

மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான, இயற்கை எரிவாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மத்திய அரசின் கெயில் நிறுவனம் வழங்கி வரும் இயற்கை எரிவாயுவின் விலையை 1.11.2014 முதல் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதனால், இயற்கை எரிவாயுவிலிருந்து உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் எரிபொருளின் செலவு யூனிட் ஒன்றுக்கு இருபது சதவீதம் உயர்ந்துள்ளது.

இத்தகைய சூழலில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையிலும், நுகர்வோர் நலன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நலன், எதிர்கால மின் திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளுக்கான செலவினங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும், மின் கட்டண நிர்ணயம் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும்.

அவ்வாறு வெளியிடப்படும் கட்டணம் காரணமாக, ஏழை எளிய மக்கள், எந்தவிதத்திலும் பாதிப்படையாத வகையில் அதற்கு தேவைப்படும் கூடுதல் மானியத்தை தமிழ்நாடு அரசு, மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்பது ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசு, அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x