

வாகனப் புகை, மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படுவதால் ஏற்படும் புகை, கட்டடக் கழிவுகள், சரிவர சுத்தம் செய்யப்படாத சாலைகளில் இருந்து கிளம்பும் தூசு என காற்றில் கலந்துள்ள மாசு அளவு சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், காற்று மாசுபடுதலை தடுக்க புதிய திட்டம் வகுத்து வருகிறது சென்னை மாநகராட்சி. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உள்பட 15 நகரங்களில் காற்றில் உள்ள மாசின் அளவை அவ்வப்போது அளக்கும் கருவிகளை நிறுவும் திட்டத்தை வகுத்தது. இதனை அமல் படுத்த அந்தந்த மாநில அரசுகள் திட்டங்களை வகுத்து வருகின்றன.
இந்த வரிசையில் தமிழகத்தில் சென்னை மாநகராட்சி மாநகர சாலைகளில் கிளம்பும் தூசைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி தொழில்நுட்ப உதவியுடன் எவ்வாறு தூசை கட்டுப்படுத்துவது என ஆராய்ந்து வருகிறது.
தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபர அடிப்படையில், அன்னாநகர், கீழ்பாக்கம், தி.நகர் ஆகிய பகுதிகளில் காற்றில் கலந்துள்ள மாசின் அளவு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.