

மலேசியாவுக்கு சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார்.
தேமுதிக, தலைவர் விஜய காந்த், அவரது மனைவி பிரேம லதா, மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் கடந்த மாதம் 30-ம் தேதி மலேசியா புறப்பட்டு சென்றனர்.
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக, அவர் குடும்பத்துடன் மலேசியாவில் தங்கி, படப்பிடிப்பு வேலையை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் வாரம் அவர் சென்னை திரும்புகிறார். இதையடுத்து, தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேமுதிகவின் நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். இதில், பெரும்பாலான இடங்களில் ஓட்டு எண்ணிக்கையில் 2-ம் இடத்தை பிடித்துள்ளோம். இந்நிலையில், தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பியவுடன் முக்கிய ஆலோசனை நடத்தி, வரும் சட்டப் பேரவை தேர்தல் மற்றும் தற்போதுள்ள கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிப்பார்’’ என்றனர்.