Last Updated : 18 May, 2017 08:58 AM

 

Published : 18 May 2017 08:58 AM
Last Updated : 18 May 2017 08:58 AM

தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: பின்தங்கிய சென்னை; தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டும் அதிகாரிகள்

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தூய்மையான ரயில் நிலையங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 25 இடங்களில் தமிழகத்தில் இருந்து ஒரு ரயில் நிலையம்கூட இடம்பெறவில்லை.

ஆறுதல் தரும் விஷயமாக முதல் 100 தரவரிசையில் தமிழகத்தில் இருந்து கும்பகோணம் (40-வது ரேங்க்), கோவில்பட்டி, மேட்டுப்பாளையம், சேலம் ஆகிய ரயில் நிலையங்கள் அடுத்தடுத்த இடம் என 4 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.

பின்தங்கிய சென்னை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 184-வது இடத்திலும் எழும்பூர் ரயில் நிலையம் 288-வது இடத்திலும் உள்ளன. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் கருத்து கூறும்போது, "சென்னையின் இரு பெரும் ரயில் நிலையங்கள் தரவரிசைப் பட்டியலில் பின் தங்கியிருப்பதற்கு போதிய ரயில் நிறுத்தங்கள் இல்லாதது, குறுகலான நடைமேடைகள், பயணிகள் நடமாட்டத்துக்கு போதிய இடவசதியின்மை ஆகியன காரணமாக இருக்கலாம்" என்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லை..

தமிழ்நாடு ரயில் பயணிகளின் உரிமைகள் தீர்ப்பாயத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் போஸ் கூறும்போது, "பெரும்பாலான ரயில் நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டால் பயணிகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பிரத்யேக பாதைகள் இல்லை. இருந்தும் இதுவரை நெரிசல் பலி போன்ற சம்பவங்கள் அதிர்ஷ்டவசமாக நிகழவில்லை. எதிர்காலத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் மூன்றாவதாக ஒரு ரயில் முனையத்தை அமைக்க வேண்டும்" என்றார்.

ரயில்வே அதிகாரிகள் கூறுவது என்ன?

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "தண்ணீர் பற்றாக்குறை, சுற்றுப்புறத் தூய்மையின்மை, ரயில் நிலையங்களைச் சுற்றி ஆட்டோ, கார் ஓட்டுநர்களின் ஆக்கிரமிப்பு, பயணிகள் ஒத்துழைப்பிண்மை ஆகியனவையே சென்னை ரயில் நிலையங்கள் தரவரிசையில் பின்தங்கக் காரணம்" என்றனர்.

தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளர் பி.கே.மிஸ்ரா கூறும்போதும், "தண்ணீர் பற்றாக்குறையே சென்னை ரயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க முடியாததற்கு முக்கிய காரணம்" என்றார். மேலும், தண்ணீருக்காக உள்ளாட்சி அமைப்புகளையே சார்ந்திருப்பதாகவும் தண்ணீர் பற்றாக்குறையால் தூய்மைப் பணிகளில் தேக்கம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் தூய்மையை உறுதி செய்வதற்காக ரயில் பயணிகளுக்காக 'ஆன்போர்டு ஹவுஸ்கீப்பிங் சர்வீஸ்' அமலில் இருப்பதாகவும். ரயில் நிலையத்தின் தூய்மையை உறுதி செய்ய சிசிடிவி மூலம் கண்காணிக்குமாறும். குப்பைகளை வீசுவோர், அசுத்தம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x