

நாடு முழுவதும் 12.07 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் தேக்கமடைவதை தவிர்க்கும் வகையில், தொடங்கப் பட்ட மாற்றுத் தீர்வு முறையில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பது வேதனையாக உள்ளது என்றார் உயர் நீதிமன்ற நீதிபதி வி. தனபால்.
தமிழ்நாடு சமரசத் தீர்வு மையம் சார்பில் தென் மாவட்ட நீதிபதிகளுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் சமரசத் தீர்வாளர்களுக்கான பயிற்சி முகாம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று தொடங்கியது. இதில் சமரசத் தீர்வு மையத்தின் தலைவரான நீதிபதி தனபாலன் பேசியது:
இந்தியாவில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் 12 கோடி வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் 60 ஆயிரம் வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் 5.10 லட்சம் வழக்குகள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 1.48 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. விரைவாக நீதி வழங்குவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றாகும்.
உயர் நீதிமன்றங்களில் 300 நீதிபதி பணியிடங்களும், பிற நீதிமன்றங்களில் 2000 நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளதால், விரைவாக நீதி வழங்குவதில் தாமதம் நிலவுகிறது.
இதுபோன்ற நிலைகளில், வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியில் முடிப்பதற்காக, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 89-வது பிரிவில் 2002-ம் ஆண்டில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தத் திருத்தத்தில் நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகளை தீர்ப்பாயம், இணக்க முறை, நீதி உடன்பாடு, லோக் அதாலத், சமரசத் தீர்வு ஆகிய 5 மாற்றுத் தீர்வு முறைகளில் முடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றுத் தீர்வு முறைகளில், சமரசத் தீர்வு மூலம் ஏற்படுத்தப்படும் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யமுடியாது. சமரசத் தீர்வு முறையில் ஏற்படும் தீர்வால் அமைதி கிடைக்கிறது. இந்த அமைதி, வேறு எந்தத் தீர்வு முறையிலும் கிடைக்காது.
குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 10 வழக்குகள் சமரசத் தீர்வு மையத்துக்கு மாற்றப்பட்டு தீர்வு காணப்பட்டதன் விளைவாக, விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்த 10 தம்பதிகள் மீண்டும் ஒன்றாக சேர்ந்துள்ளனர்.
சமரசத் தீர்வு முறையை அமல்படுத்தியதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். ஆனால், இந்த முறையில் வழக்குகளுக்குத் தீர்வு ஏற்படுத்துவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. நமக்குப் பிறகு இந்த முறையை அமல்படுத்திய கர்நாடகம், டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் வழக்குகளை முடிப்பதில் முன்னணியில் உள்ளன. தமிழகம் 17-வது இடத்தில் உள்ளது. இது வேதனையானது. குறிப்பாக, மதுரை மற்றும் 9 தென் மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன.
மதுரைக்கு அருகிலுள்ள ஒரு மாவட்டத்தில் சமரசத் தீர்வு மையத்துக்கு ஒரு வழக்குகூட பரிந்துரைக்கப்படவில்லை. இது துரதிருஷ்டவசமானது. இந்தப் பின்னடைவுக்கு என்ன காரணம் என்பதை நீதிபதிகளும், சமரசத் தீர்வாளர்களும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். வருங்காலத்தில் சமரசத் தீர்வு முறையில் தமிழகம் முதலிடத்துக்கு வருவதற்கு உழைக்க வேண்டும் என்றார் நீதிபதி தனபாலன்.
சமரசத் தீர்வு மைய உறுப்பினர் களான நீதிபதிகள் பி. ராஜேந்திரன், கே.பி.கே. வாசுகி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, சமரசத் தீர்வு மைய ஒருங்கிணைப்பாளர் உமா ராமநாதன் ஆகியோர் பேசினர்.