Published : 07 Feb 2014 08:30 PM
Last Updated : 07 Feb 2014 08:30 PM

நெல்லை: மாநகராட்சி கவனக்குறைவால் வீணாகும் குடிநீர்: வாடும் பயிருக்கு தண்ணீரைத் திருப்பிய விவசாயிகள்

திருநெல்வேலி அடுத்த கொத்தன்குளம் பகுதியில் குடிநீர் குழாயில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட உடைப்பால், ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீர் வீணாகி குளமாக தேங்கி நிற்கிறது. அத்தண்ணீரை மோட்டார்கள் மூலம் விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

திருநெல்வேலியில் வரும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கும் நிலையில், பெருமளவு குடிநீர் வீணாவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

குழாய் பதிக்கும் பணி

சுத்தமல்லியிலிருந்து பாளையங் கோட்டைக்கு குடிநீர் கொண்டு செல்ல அம்பாசமுத்திரம் சாலையின் வடக்குபுற த்தில் 2 அடி விட்டமுள்ள குழாய்களை பதிக்கும் பணிக்கு, ஈரோட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தினர் குழாய்களை பதிக்கும் பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை. சாலை வளைந்து செல்லும் பகுதிகளில் குடிநீர் குழாய்களை வளைத்து செல்லாமல், நேராகவே பதித்திருக்கிறார்கள்.

இதனால், சாலையோர வயல்களிலும் குழாய்களை பதிக்க குழி தோண்டப்பட்டிருக்கிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, விளைநிலங்களில் பதிக்கப்பட் டிருந்த குழாய்கள் அகற்றப் பட்டு, வயல்களின் வெளிப்புறமாக வளைத்து பதிக்கப்பட்டது. இதற்காக பிராதான குழாய்களில் ஒட்டு போடப்பட்டிருந்தது. இக்குழாய்கள் வழியாக தண்ணீர் அதிக அழுத்தத்தில் பாய்ந்து செல்லும்போது, உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணானது.

அழுத்தத்தால் உடைப்பு

கொத்தன்குளம் பகுதியில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகளின் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் பொக்லைன் மூலம் தோண்டி, குழாய் உடைப்பை சரி செய்தனர். அப்போது அள்ளப்பட்ட மண்ணை, விளைந்த நெற்பயிர் மீது கொட்டி உள்ளனர் என, நிலத்துக்கு சொந்தக்காரரான பாளையங்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஜோசப்தாஸ் தெரிவித்தார்.

புத்திசாலி விவசாயிகள்

குழாய் உடைப்பை சரி செய்த பின்னரும் மீண்டும், மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு, தொடர்ச்சியாக தண்ணீர் வீணாகி வருகிறது. அவ்வாறு வீணாகி தேங்கிய தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம், சாலையின் தெற்குபுறமுள்ள வயல்களுக்கு பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பணியாளர் பற்றாக்குறை

மேலப்பாளையம் மண்டல உதவிச் செயற்பொறியாளர் டி. சாந்தி கூறியதாவது:

குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்துள்ளேன். உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இன்னும் சில நாள்களில் உடைப்புகள் சரிசெய்யப்படும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x