

சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ‘ருத்ராட்சம்’ வைத்து சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதன்மூலமாக துறவு நிலைக்கு மரியாதை கூடுமா? அல்லது குறையுமா? என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது.
இங்கு ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர், அப்பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக கற்தூணில் உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து, பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
இந்தக் கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை வித்தியாசமானது. பக்தர் ஒருவர் கனவில் சிவன்மலை முருகன் வந்து, குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், ‘ஆண்டவன் உத்தரவு’ என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லை. மற்றொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில், பழைய பொருளே வைக்கப்பட்டிருக்கும். அப்பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறும்போது, “கடந்த ஜன.10-ம் தேதி இரும்புச் சங்கிலி வைத்துப் பூஜை செய்யப்பட்டு, கண்ணாடி பெட்டிக்குள் நேற்று (திங்கள்கிழமை) வரை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கனவில் வந்ததாகக் கூறி, நேற்று 108 ருத்ராட்சக் கொட்டைகள் வைத்து சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. இது துறவு நிலையை குறிப்பதாகும். அதன் மீதான மரியாதை கூடுமா? அல்லது குறையுமா? என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது” என்றனர்.