Published : 30 Jun 2016 07:03 PM
Last Updated : 30 Jun 2016 07:03 PM

7-வது ஊதியக்குழுவை கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: தொமுச ஆதரவு

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் ஜுலை 11-ம் தேதி முதல் தொடங்கவுள்ள கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தொமுச ஆதரவளித்துள்ளது.

இது தொடர்பாக தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதனைக் கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் ஜுலை 11 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளனர். இதற்கு தொமுச பேரவை முழு ஆதரவை அளிக்கும்.

7வது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் 2015 நவம்பர் 19-ம் தேதி சமர்ப்பித்தது. கடந்த ஊதியக் குழுக்கள் 54 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு வழங்கிய நிலையில், 7வது ஊதியக் குழு வெறும் 14.27 சதவிகிதம் மட்டுமே வழங்கியது. இதனை எதிர்த்து மத்திய அரசு ஊழியர்களின் சம்மேளனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் 2016 ஏப்ரல் மாதத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன.

ஆனால், தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தலை சுட்டிக் காட்டி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்கும்படி மத்திய அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பிரச்சினைகளில் சுமூக தீர்வு காண வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய போராட்டக் குழு போராட்ட நடவடிக்கைகளை நான்கு மாதத்திற்கு தள்ளி வைத்து, வருகின்ற ஜூலை 11-ம் தேதி காலை 6.00 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்குமென கடந்த ஜூன் 9-ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியது.

இவ்வளவு கால அவகாசம் கொடுக்கப்பட்ட பிறகும் கூட கோரிக்கைகளின் நியாயத்தை மத்திய அரசு உணரவில்லை. பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மத்திய அமைச்சரவை கூடி 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு தன்னிச்சையாக ஒப்புதல் வழங்கியுள்ளதை கண்டிக்கிறோம். மத்திய அரசு ஊழியர்கள் ஜுலை 11 அன்று தொடங்கவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்போம்'' என்று மு.சண்முகம் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x