

குடியரசுத் தலைவர் தேர்தல் நடப்பதால் ஜூலை 17-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் இல்லை என்று பேரவைத் தலைவர் பி. தனபால் அறிவித்தார்.
நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடக்கிறது. தற்போது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், ஜூலை 17-ம் தேதி போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேதியில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடப்பதால் அலுவலை மாற்றுவது குறித்து முடிவெடுக்க அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் நடந்த கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள், பேரவை துணைத் தலைவர் மற்றும் திமுக சார்பில் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன்,கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் சார்பில் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில் நிருபர்களிடம் பி.தனபால் கூறும்போது, ‘‘ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடப்பதால், உறுப்பினர்கள் வாக்களிக்கும் வகையில் அன்று பேரவைக் கூட்டம் நடக்காது. அன்று நடப்பதாக அறிவிக்கப்பட்ட போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை விவாதம், ஜூலை 8-ம் தேதி சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. மற்ற நிகழ்வுகளில் மாற்றம் ஏதும் இல்லை’’ என்றார்.