Published : 22 Sep 2016 07:28 AM
Last Updated : 22 Sep 2016 07:28 AM

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்கலாம்: கிராமப்புறங்களிலும் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் கிராமப்புறங்களிலும் முடிந்த வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. மேலும், பதற்றமான வாக்குச் சாவடிகளில் மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பாமக துணை பொதுச் செயலாளர் தமிழரசு, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜோதிஸ்வரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருந்ததாவது:

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 32 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் 12,618 பஞ்சாயத்து தலைவர்கள், 99,333 கிராம பஞ்சாயத்து வார்டுகள், 6,471 பஞ்சாயத்து யூனியன் வார்டுகள், 655 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான உரிய இடஒதுக் கீட்டை வழங்க வேண்டும்.

சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் 2016 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் 2016-ல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தங்களைச் செல்லாது எனவும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் அறிவிக்க வேண்டும். பஞ்சாயத்துகளில் நடக்கும் தேர்தலுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்குப் பதிலாக வெளிமாநில அதிகாரிகள் அல்லது மத்திய அரசு அதிகாரிகளைக் கொண்டு தேர்தலை நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும். இவ்வாறு மனுக்களில் கோரியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:

உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட நேர்மையான, வெளிப் படையான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆளுங்கட்சிக்கு ஆதர வாக மாநில அரசு பணியாளர்கள் செயல்படுவார்கள் என்பதுதான் இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டாக உள் ளது. அதற்காக எல்லா அரசு ஊழியர் கள் மீதும் பழிசுமத்த முடியாது. இதனால் மனுதாரர்களின் கோரிக்கையை அப்படியே ஏற்க முடியாது.

எனவே, மாநில தேர்தல் ஆணையம் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்கலாம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பஞ்சாயத்துகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை பயன்படுத்த முடியும். எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் கிராமப்புறங்களிலும் முடிந்த அளவு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும் ஒரே இயந்திரத்தில் 4 வாக்குகளைப் பதிவு செய்யும் வண்ணம் ‘மல்டி பாயின்ட் சிங்கிள் சாய்ஸ்’ வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்தத் தேர்தலுக்குப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்தும் ஆராய வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்க முயற்சிக்க வேண்டும். இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வார்டுகள் மறுவரையறை செய் வதைப் பொறுத்தமட்டில் அடுத்த தேர் தலுக்கு முன்பாக எல்லாப் பணிகளையும் தேர்தல் ஆணையம் முடிக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x