Published : 16 Dec 2013 12:00 AM
Last Updated : 16 Dec 2013 12:00 AM

விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலம் உண்மை, நேர்மைக்குக் கிடைத்த வெற்றி: பேரறிவாளனின் தாய் பேச்சு

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்து பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கக் காரணமாக இருந்த விசாரணை அதிகாரிகள், தற்போது இக்கொலையில் அவருக்குத் தொடர்பில்லை என வாக்குமூலம் அளித்து வருவதை உண்மை, நேர்மைக்காக நாங்கள் தொடர்ந்து போராடியதற்கான வெற்றியாக பார்க்கிறோம் என்றார் பேரறிவாளனின் தாய் கு. அற்புதம்மாள்.

மரண தண்டனைக்கு எதிரான வரலாற்றுப் பதிவான ‘உயிர் வலி’ என்ற ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.

இதில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாய் கு.அற்புதம்மாள் கலந்து கொண்டு பேசியது:

“மரணதண்டனை ஒழிப்பு மற்றும் எதிர்ப்பில் நாங்கள் குடும்பத்துடன் வீதியில் இறங்கிப் போராடி வருகிறோம். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்காக மட்டும் அல்ல எங்கள் போராட்டம். ஒட்டுமொத்த நாட்டிலும் மரண தண்டனை இருக்கக் கூடாது என வலியுறுத்தி, அது முற்றிலும் ஒழிக்கப்படும் வரை போராட்டங்களிலிருந்து நாங்கள் பின் வாங்கப் போவதில்லை. செய்யாத குற்றத்துக்காக 22 ஆண்டுகள் சித்திரவதைகள், இன்னல்கள், தனிமைக் கொடுமை என பேரறிவாளன் தனது இளமைக் காலத்தை தொலைத்துவிட்டான்.

பேரறிவாளன் வாக்குமூலத்தை மாற்றி எழுதியதற்காக காவல்துறை அதிகாரி தியாகராஜனை தண்டிக்க வேண்டும் என்று சிலர் பேசிவருவதை நான் ஏற்கவில்லை. இக் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரிகள் கார்த்திகேயன், ரகோத்தமன் ஆகி யோர் மரணதண்டனைக்கு எதிரான கருத்துகளை இப்போது பதிவு செய்து வருகின்றனர்.

அவர்களின் கருத்துகளால் ஆறுதல் பெறுவதுடன் உண்மையும் நேர்மையும் ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x