பசி நாராயணன் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவி: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

பசி நாராயணன் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவி: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
Updated on
1 min read

'பசி' நாராயணன் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான ஆவணத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்தில் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பிரபல திரைப்பட நடிகர் மறைந்த 'பசி' நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவரது மனைவி வள்ளிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

எம்.ஜி.ஆர் நடித்த 'அன்பே வா, 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல திரைப்பட நடிகர் 'பசி' நாராயணன் குடும்பத்தினர், அவரது மறைவுக்குப் பிறகு எவ்வித வருமானமும் இன்றி வறுமையான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்ற செய்தியை ஊடகங்கள் வழியாக முதல்வர் ஜெயலலிதா அறிந்து கொண்டார்.

'பசி' நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 'பசி' நாராயணன் மனைவி வள்ளிக்கு ரூ.10 லட்சம் வழங்கிடஉத்தரவிட்டார்.

மேலும், ரூ.10 லட்சம் வள்ளியின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு,

அந்த வைப்பு நிதியிலிருந்து வட்டியாக மாதந்தோறும் 8,125/- ரூபாய் வள்ளிக்கு கிடைக்கப் பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா 24.7.2016 அன்று அறிவித்தார்.

அதன்படி, 'பசி' நாராயணன் மனைவி வள்ளிக்கு ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், 10 லட்சம் ரூபாய்க்கான ஆவணத்தை வழங்கினார். நிதியுதவியை பெற்றுக் கொண்ட வள்ளி தனது நன்றியினை முதல்வருக்கு தெரிவித்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in