விஜயகாந்திடம் அரசியல் நிலவரம் பேசினேன்: ஜி.கே.வாசன்

விஜயகாந்திடம் அரசியல் நிலவரம் பேசினேன்: ஜி.கே.வாசன்
Updated on
1 min read

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடனான சந்திப்பின்போது, அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் பேசியதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். காங்கிரஸ் கட்சியுடன் தே.மு.தி.க., கூட்டணி குறித்து, இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், புத்தாண்டையொட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரில் சந்திக்க, ஜி.கே.வாசன் இன்று சத்திய மூர்த்திபவனுக்கு வந்தார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் வாசனுக்கு வரவேற்பளித்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பிரச்சினைக்கு தீர்வு காண ஒருபுறம் மத்திய அரசு முயற்சிக்கும் போது, இன்னொரு புறம் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்வது மிகுந்த கண்டனத்துக்குரியது.

மீனவர் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்!

இது இலங்கை கடற்படையின் தவறான போக்கு. மத்திய அரசின் தொடர் முயற்சியால், இந்த மாதம் இருநாட்டு மீனவர்களின் கூட்டுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சுமூக தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்.

மீனவர் பிரச்சினையை தமிழக கட்சிகள் அரசியல் ஆக்கக்கூடாது. அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு, மீனவர்கள் பிரச்சினையில் நல்ல முடிவு ஏற்பட ஒத்துழைக்க வேண்டும்.

தமிழ்த் திரை உலகில் தனக்கென்று தனிமுத்திரை பதித்தவர் விஜயகாந்த். அந்த வகையில் அவரது மகன் சண்முகப்பாண்டியன் திரை உலகில் பிரவேசித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்தை தெரிவிப்பதற்காக, அவரது குடும்ப நலம் விரும்பி என்ற முறையில் நேரடியாக வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தேன்.

இரண்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஒரு இடத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசும்போது, அரசியல் பற்றியும் பேசுவார்கள். மத்திய, மாநில அரசியல் நிலவரம் குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றியும், நாட்டின் நலன் குறித்தும் இருவரும் பேசினோம்" என்றார் ஜி.கே.வாசன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in