கங்கை-காவிரி இணைப்புத் திட்டம்: நடிகர் ரஜினிகாந்துக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கங்கை-காவிரி இணைப்புத் திட்டம்: நடிகர் ரஜினிகாந்துக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அய்யாகண்ணு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.1 கோடி நன்கொடை அளிப்பதாக, நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அந்த தொகையை உடனடியாக பிரதமரிடம் அளித்து, திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

மழைக் காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பதைத் தடுக்க, ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். வெள்ளத்தால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் அழிவதைத் தடுக்கும் வகையில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து அய்யாகண்ணு கூறும்போது, “ரஜினிகாந்த் நன்கொடை அளிக்கும்பட்சத்தில், அந்தப் பணத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன்மூலம், கங்கை- காவிரி இணைப்புத் திட்டம் செயல்வடி வம் பெற வாய்ப்புள்ளது. இது தொடர்பாக ரஜினிகாந்தை அவரது வீட்டில் இன்று (ஜூன் 22) சந்திக்கவுள்ளோம். அதேபோல, தலைமைச் செயலகத்தில் முதல்வரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in