Published : 11 Sep 2016 05:08 PM
Last Updated : 11 Sep 2016 05:08 PM

மாரியப்பன் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் : ஜி.ராமகிருஷ்ணன்

பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று மாநிலத்திற்கும், தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய்லாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் 20 வயதே ஆன மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று மாநிலத்திற்கும், தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாரியப்பன் தங்கவேலு சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாய் தினமும் பழம் விற்றும், தந்தை செங்கல் சூளையில் வேலை செய்தும் குடும்பத்தை பாதுகாத்து வந்தனர்.

1.89 மீட்டர் உயரத்தை தாண்டி தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் அதே உயரம் தாண்டுதல் போட்டியில் 1.86 மீட்டர் தாண்டி வருண்சிங் என்ற வீரர் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய, மாநில அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமும், முறையான பயிற்சியும் அளித்தால் இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் அதிகளவிலான பதக்கங்களை வெல்ல முடியும் என்பதற்கு இதுவே சான்றாகும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x