

வேளாண்துறை அமைச்சரிடம், மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால், பாதிப்புகள் இல்லை என விவசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
தமிழக வேளாண் துறை அமைச்சர் அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கால்டை பராமரிப்பு துறை அமைச்சர் மற்றும் வேளாண்மைத் துறை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என, நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மண்ணிவாக்கம் கிராமத்தில், விவசாய நிலங்களில் உள்ள மானாவாரி பயிர்கள் மற்றும் எழிச்சூர் பகுதியில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயந்திரங்கள் மூலம் விளை நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
அப்போது விவசாயிகள், மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால்தான் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோமே தவிர, மழையினால் பாதிப்பு இல்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட் மோட்டார் குறித்து விவசாயிகளிடம் ஆய்வுக் குழுவினர் கேட்டறிந்தனர். பின்னர், அதே பகுதியில் விவசாயிகளின் மத்தியில் வேளாண் துறை அமைச்சர் பேசியதாவது:
“தமிழகத்தில் வேளாண் பயிர் உற்பத்தி 3 மடங்கு அதிகரித் துள்ளது. உற்பத்தியை மேலும் பெருக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில் வேளாண் திட்டங்களுக்காக ரூ. 5,816 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மட்டும் ரூ. 1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சொட்டுநீர் பாசனம் செய்வதற்காக சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது’’ என்றார்.
பின்னர், அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்த அவர், “வேளாண் துறை திட்டங்கள் செயல்படுத்தும் முறை குறித்து தீவிரமாக கண்காணிப்பட்டு வருகிறது. அதனால், விவசாயிகள் நிச்சயம் பயன் அடைவர்” என்றார்.
இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரம் எம்பி மரகதம், ஸ்ரீபெரும்புதூர் எம்பி ராமச்சந்திரன் மற்றும் பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சீதாராமன் கூறியதாவது:
“காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரியாக வடகிழக்கு பருவமழை, 1,116 எம்எம் அளவு பெய்ய வேண்டும். ஆனால், 503 எம்எம் அளவுதான் பெய்துள்ளது. இதிலும், ஆலந்தூர் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மழை பெய்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளான மதுராந்தகம், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் போதிய மழை இல்லை. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்தால், நமது மாவட்டத்தின் முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். ஆனால், அங்கும் போதிய மழை இல்லாததால் போதிய நீர் வரத்து இல்லை. இதனால், நமது மாவட்டத்தில் போதிய பருவமழை இல்லாததால், பாதிப்புகள் ஏதும் இல்லை” என்றார்.