

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீiரங்கம் ரங்கநாதர் கோயிலில் கும்பாபிஷேக பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கோயிலின் பழமையும், தொன்மையும் மாறாத வகையில் புதுப்பிக்கும் பணிகளின் ஒரு பகுதியாக பிரதான தெற்கு ராஜகோபுரம் உட்பட 21 கோபுரங்கள், 30-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வர்ணம் பூசும் பணிக்காக, முதல் முறையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘வாட்டர் கலர்’ பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து ‘தி இந்து’-விடம் ஸ்தபதி ஆனந்த் கூறியதாவது: 17 ஆண்டுகளாக ஸ்தபதியாக பணியாற்றி வருகிறேன். எனது தந்தை எம்.எஸ்.சிவப்பிரகாசம் ஸ்தபதியார், ஸ்ரீரங்கம் தெற்கு ராஜகோபுரத்தின் 13 நிலைகளையும் கட்டியவர். அவருக்கு பின் நானும் என்னுடன் பணியாற்றும் கலைஞர்களும் தமிழகத்தில் உள்ள பிரபல கோயில்களில் புனரமைப்பு பணிகள், புதிய கோயில் கட்டுமான பணிகளைச் செய்து வருகிறோம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகளில் எங்கள் பங்கும் முக்கியமானது.
கோயில் வேலைகளில் பெரும் பாலும் அதன் அடையாளம் மாறாத வண்ணம் பணியாற்ற வேண்டும். அந்தக்காலத்தில் கோயில் கோபுரம், சுவர், சித்திரங்களுக்கு இயற்கைக்காக மூலிகை சாயங்களை மட்டுமே பயன்படுத்தினர். அதை பஞ்சவர்ணம் என அழைப்பார்கள். மஞ்சள், சிகப்பு, பச்சை, நீலம், கருப்பு ஆகிய 5 வர்ணங்களை எடுத்துக்கொண்டு அதில் இருந்து புதிய வர்ணங்களை உருவாக்கி பயன்படுத்துவது வழக்கம். ஆனால், காலப்போக்கில் ஆயில் பெயின்ட் ஆதிக்கம் வந்தபிறகு ஆயிரக் கணக்கான கலர்களை கம்பெனிகளே பிரித்துக் கொடுத்துவிடுகின்றன. முன்பு கோயில்களிலும் ஆயில் பெயின்ட் மட்டுமே பயன்படுத்தும் நிலை இருந்தது.
ஆயில் பெயின்ட்டைப் பொறுத்தவரை, பயன்படுத்தும் தன்மையைப் பொறுத்து அதன் பிரதிபலிப்பு இருக்கும். சரியான முறையில் கலந்து வர்ணம் பூசவில்லை என்றால் வெயிலுக்குத் தாக்குப் பிடிக்காமல் உரிந்து, வெடிப்பு ஏற்படும். மேலும் பெயின்ட் செய்த சில நாட்கள் வரை ஒருவித நெடி வீசிக்கொண்டே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு உற்பத்தி முறையிலும், பயன்படுத்துவதிலும் சூழலுக்கு ஏற்றது என அறிவித்த ஒரு பிரபல நிறுவனத்தின் வர்ணங்களைப் பயன்படுத்த, இந்து சமய அறநிலையத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
அதை நடைமுறைப் படுத்தும் விதமாக முதல்முறையாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் பணிக்கு இவ்வகை வாட்டர் கலர் பயன்படுத்துகிறோம். இதனைப் பயன்படுத்துவதால் பெயின்ட் நெடி இருக்காது. வர்ணம் பூசும் கலைஞர்களுக்கு அலர்ஜி ஏற்படாது. பணிகள் முடிந்து பார்க்க இயற்கையான அழகில் கோபுரங்கள் காட்சியளிக்கும். மழை, வெயில் எதுவானாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் தாக்குப்பிடிக்கும். 10 ஸ்தபதிகள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு வர்ணம் பூசும் பணி முடிவடைய வாய்ப்புள்ளது என்றார் ஆனந்த்.