பாஜக அணிக்கு யூகிக்க முடியாத வெற்றி: வைகோ நம்பிக்கை

பாஜக அணிக்கு யூகிக்க முடியாத வெற்றி: வைகோ நம்பிக்கை
Updated on
1 min read

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

மதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடந்தது.

தேமுதிக எம்எல்ஏ ஏ.கே.டி ராஜா தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசும்போது, "பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை முறைப்படி அறிவிப்பார். தமிழகத்தில் இந்தக் கூட்டணி அமைவதற்காக தமிழருவி மணியன் ஒரு துறவியைப் போல பாடுபட்டுள்ளார்.

1972-ல் இருந்து அதிமுக, திமுக என இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஒரு கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டால் மற்றொரு கட்சியை பிடிக்காவிட்டாலும், வேறு வழியின்றி தேர்வு செய்யும் சூழ்நிலை இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையிலிருந்து மக்களை மீட்கும் தேர்தல்தான் இது. திமுக, அதிமுகவிலிருந்து விடுபட்டு, மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக அமையும்.

கிரிமியா என்ற இடத்தில் வசிக்கும் மக்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து பொதுவாக்கு அளித்துள்ளனர். அதன்படி நடக்கப்போகிறது. ஆனால் இலங்கையில் சிங்களவர்களால் எத்தனையோ லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டும், சிறுமிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

விடுதலைப்புலிகளின் கடற்படையை இந்திய அரசுதான் அழித்ததாக யஷ்வந்த் சின்ஹாவே கூறியுள்ளார். எனவே நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கும் விடிவு கிடைக்கும்.

நான் கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை. எந்த கூண்டில் இருந்தாலும் புலி உறுமும். மாகாணங்களுக்கு உரிமை, மதச்சார்பின்மை, சமூகநீதி, வாஜ்பாய் முடிவின்படி இலங்கை எதிரான போக்கு போன்றவற்றில் மோடி அரசு சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனக்கு அதிகார கனவு கிடையாது. மதிமுக நடத்தும் முதல் செயல்வீரர் கூட்டத்துக்கு தலைமை வகிப்பது தேமுதிக. அந்தளவுக்கு ஒற்றுமையுடன் உள்ளோம். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. இந்த கூட்டணி யாரும் தமிழகத்தில் யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு வெற்றி பெறும்" என்றார் வைகோ.

இக்கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன், பாமக மாவட்டச் செயலாளர் வீரக்குமார், மக்கள் தமிழகம் கட்சி நிறுவனர் புரட்சிக்கவிதாசன், காந்திய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in