Published : 29 Jul 2016 09:57 AM
Last Updated : 29 Jul 2016 09:57 AM

சேகர்பாபுவிடம் திமுகவினர் உஷாராக இருக்க வேண்டும்: அமைச்சரின் பேச்சால் மோதல்

தொகுதி உறுப்பினர் பி.கே.சேகர்பாபுவிடம் திமுகவினர் உஷாராக இருக்க வேண்டும் என்ற அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் பேச்சால் சட்டப்பேரவையில் அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு, அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு அவ்வப்போது அமைச்சர்கள் பதிலளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நடைபெற்ற விவாதம்:

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

சேகர்பாபு சிறிய விஷயத்தை பெரிதுபடுத்தி பேசுவதில் வல்லவர், ஈரை பேனாக்கி, பேனை பெரு மாளாக்கி விடுவார். அவர் எந்தப் பிரச்சினையைப் பற்றி பேசுவதாக இருந்தாலும் ஆதாரத்தை கொடுத்துவிட்டுப் பேச வேண்டும்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ:

சேகர்பாபு அதிமுகவில் இருக்கும்போது முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி இதே அவையில் பேசியுள்ளார். அவரை வளர்த்து மக்களுக்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. அப்படியிருந்தும் அவர் திமுகவுக்கு சென்றுவிட்டார். நேற்று எங்களைப் பாராட்டினார். இன்று எதிர்க்கிறார். நாளை எப்படி இருப்பார் எனத் தெரியாது. எனவே, அவரிடம் திமுகவினர் உஷாராக இருக்க வேண்டும்.

அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:

அன்று பேசியது தவறு என்பதை முழுமையாக உணர்ந்ததால்தான் அவர் இப்போது திமுகவில் இருக்கிறார். அவர் திமுகவுக்கு விசுவாசமாகவே இருப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

அதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து கடந்த திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் குறித்து சேகர்பாபு பேசியதை அவைக் குறிப்பிலிருந்து வாசிக்கத் தொடங்கினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுக உறுப்பினர்களும் கோஷமிட அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:

அதிமுக - திமுக இடையே கட்சி மாறுவது சகஜமாக உள்ளது. ஒரு கட்சியில் இருக்கும்போது பேசியதை எல்லாம் அவைக் குறிப்பிலிருந்து எடுத்து படிப்பது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். இதற்கு அவை முன்னவருக்கு உரிமை உண்டு எனில் அந்த உரிமை எங்களுக்கும் வேண்டும். நாங்களும் பழைய வரலாற்றை பேச வேண்டிவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x