

கல்பாக்கம் அணுமின் நிலையத் துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக் கத்தில் அணுசக்தித் துறையின் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், இந்திய அணுமின் கழகத்தின் சென்னை அணுமின் நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி அணுமின் திட்டம், கல்பாக்கம் அணுசக்தி மறுசுழற்சிப் பிரிவு மற்றும் பல்வேறு அணுசக்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், கல்பாக்கம் அணுமின் நிலையம் உட்பட 10 இடங்களில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பாதுகாப்பு பலமாக இருந்தது, தற்போது அவர் வழக்கில் சிக்கியுள்ளதால் கல்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு குறைவாக உள்ளது, அதனால் கல்பாக்கம் பகுதியில் யார் வேண்டுமானாலும் எளிதாக நுழையும் நிலை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, அணுமின் நிலைய நிர்வாகத்தினர் கல்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, அணுமின் நிலைய வளாகம் முழுவதும் தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகிறது. மேலும், கடிதத்தின் மேல் உள்ள அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் அது எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் குறித்து, கல்பாக்கம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால், கல்பாக்கம் மற்றும் அணுமின் நிலையப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.