

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதா வேண்டாமா என்பது குறித்து பிரதமர் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அவர் அளித்த பேட்டி:
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது பற்றி டெல்லியில் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் செல்வதைப் போல முடிவெடுப்பார்கள் என்று சொல்கிறார்களே?
"அமைச்சரவையில் என்ன பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது."
பிரதமர் கலந்துகொள்வதாக முடிவெடுத்தால், மத்திய அரசுக்கு திமுக வெளியே இருந்து கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஆதரவைத் திரும்பப் பெறுமா?
"நாங்கள் ஏற்கனவே மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிவிட்டோம். வெளியிலிருந்து ஆதரவு என்பதல்ல இப்போது பிரச்சினை. பிரதமருக்கு மனச்சாட்சி உண்டு. அந்த மனச்சாட்சிபடி பிரதமர் நடந்து கொண்டால் போதும்.
இந்தியாவின் சார்பில் பிரதமரோ, வேறு யாருமோ இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற என்னுடைய வேண்டுகோளை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்" என்றார் கருணாநிதி.