

சென்னை பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலை படுமோசமாக இருப்பதால், அப்பகுதி மக்கள் அதை கடந்து செல்ல முடியாமல் தினமும் அவதிப்படுகின்றனர்.
சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி, பெரும்புதூர் பகுதிகளை இணைக்கும் சாலை முக்கியமானதாக இருக்கிறது. பல்லாவரம் சிக்னலில் இருந்து, இந்திரா காந்தி சாலையாக துவங்கும் இந்த சாலை குன்றத்தூர் வரை சுமார் 7 கி.மீ தூரம் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. புறநகர் பகுதிகளில் முக்கியமான சாலைகள் நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், பல்லாவரம் - குன்றத்தூர் சாலை மட்டுமே, இன்னும் இருவழிச் சாலையாக உள்ளது.
இந்த சாலை குறுகியதாக உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே, இருந்த இந்த சாலையின் அகலம் ஆக்கிரமிப்பால் குறைந்துள்ளது. இச்சாலை வழியாக மாநகர பஸ்களும், கனரக வாகனங்களும், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும் செல்வதால், விபத்துகள் அதிகரித்து வரு கின்றன.
இது தொடர்பாக அனகாபுத்தூர், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது “பல்லாவரம் முதல் அனகாபுத்தூர் வரை சாலை, 15 அடி அகலம் மட்டுமே உள்ளது. மீதி இடம், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. மேலும், ஏற்கனவே இருக்கும் சாலையில் எந்த பராமரிப்பும் இல்லாமல் வெயில் காலத்தில் புழுதி பறக்கிறது. இதுவே, மழைகாலத்தில் பள்ளம், மேடுகளில் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், வண்டலூர், கேளம்பாக்கம் போன்ற புறநகர் பகுதிகளில் 4 வழி சாலைகள் போடப்பட்டு சிறப்பாக உள்ளது. ஆனால், இந்த சாலையை பராமரிக்கமும் இல்லை, விரிவாக்கவும் செய்யவில்லை. இந்த சாலையை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை 4 வழி சாலையாக மாற்றுவதாக கூறியும், கடந்த 6 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில்தான் இருக்கிறது’’ என்கிறார்கள்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் செல்போன் மூலம் கேட்க முயற்சித்தபோது, எந்த பதிலும் அளிக்கவில்லை.