Published : 26 Mar 2014 12:00 AM
Last Updated : 26 Mar 2014 12:00 AM

வி.சிறுத்தைக்கு தனிச் சின்னம்: தேர்தல் ஆணையம் பரிசீலனை

நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தனிச் சின்னம் ஒதுக்குவது பற்றி பரிசீலித்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எம். முகம்மது யூசுப் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியில் நட்சத்திர சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர சின்னம் மூலம் எங்கள் கட்சியை மக்கள் எளிதாக அடையா ளம் கண்டுகொள் வார்கள்.

கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது 2 தொகுதிகளில் எங்கள் கட்சி நட்சத்திர சின்னத்தில் போட்டியிட்டது.

தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய 2 தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலின்போது எங்கள் கட்சியின் தேர்தல் சின்னமாக நட்சத்திரம் சின்னத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சின்னத்தை யோ ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதைப் பரிசீலித்து எங்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை மனு தற்போது தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது.

சின்னம் ஒதுக்குவது பற்றி சட்டப்படி தேர்தல் ஆணையம் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருமாவளவனுக்கு தேர்தல் வரை போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவு

நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்திருந்தார். ‘‘சில சாதிய சக்திகளால் எனக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பரவாக்கோட்டை உள்பட சில இடங்களில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக பல்வேறு ஊர்களுக்குச் சென்று நான் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே, எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்று அவர் கோரியிருந்தார்.

இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி சி.டி. செல்வம், நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை தனி பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமித்து திருமாவளவனுக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x