

பேரவையில் புதிய உறுப்பினர் களின் கன்னிப்பேச்சின்போது குறுக்கீடு தொடர்பாக, திமுக- அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாதம் ஏற்பட்டது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் 3-வது நாளாக நேற்று விவாதம் நடந்தது. விவாதத்தை, அதிமுக உறுப்பினர் என்.முருகுமாறன் தொடங்கி வைத்தார். பின்னர், சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ கார்த்திக் தொடர்ந்தார்.
கார்த்திக் (திமுக):
சி்ங்கா நல்லூர் தொகுதியில், ஒண்டிப்புத் தூர் ரயில்வே உயர்மட்ட பாலப் பணிகள், கடந்த 4 ஆண்டுகளாக நடக்கவில்லை. 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில், முதல்வர் கருணாநிதி, பாலப்பணிகளை தொடங்கி வைத்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், கட்டுமானப் பணிகள் தாமதமாகியுள்ளன. இதை விரைந்து முடிக்க அமைச்சர் ஆவண செய்ய வேண்டும்.
அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:
இந்த பாலம் தொடர்பாக உள்ள நீதிமன்ற வழக்கு முடிந்ததும் பணிகள் தொடங்கப்படும்.
கார்த்திக்:
செம்மொழி மாநாட்டுக் குப் பிறகு காந்திபுரம் பகுதியில் நெரிசலை குறைக்க மேம் பாலத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ரூ.100 கோடி ஒதுக்கி, அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டன.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி:
செம்மொழி மாநாட்டில் அறிவிப்பு மட்டும்தான் வெளியிடப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகின்றன.
(அமைச்சரின் பேச்சுக்கு திமுக வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்).
பேரவை தலைவர் தனபால்:
கன்னிப்பேச்சில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி பேச வேண்டும். குற்றச்சாட்டுக்குத்தான் அமைச்சர்கள் பதில் கூறினர்.
எடப்பாடி பழனிசாமி:
நாங்கள் அவர் கேள்விக்கு விளக்கம்தான் அளித்தோம்.
துரைமுருகன்:
முருருமாறன் பேசும்போது, அமைச்சர் விளக்கம் சொல்ல வேண்டியிருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சர் குறுக்கீடு செய்யாமல், பெருந்தன்மையாக இருந்தார். அவர் பேசி முடித் ததும், அமைச்சர் விளக்கம் அளித்தார். அதேபோல், திமுக உறுப்பினர்களின் கன்னிப் பேச்சின் போதும், அமைச்சர்களின் குறுக்கீடு இருக்கக் கூடாது.
எடப்பாடி பழனிசாமி:
பலமுறை குற்றச்சாட்டு கூறியதால் நாங்கள் விளக்கம் அளித்தோம். திமுக ஆட்சியில் வெளியிட்ட அறிவிப்பு களுக்கு, நாங்கள் டெண்டர் விட்டு, நிதி ஒதுக்கி, பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
எஸ்.பி.வேலுமணி:
தவறான தகவல்களுக்கு, புள்ளி விவரத்து டன் பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை.
துரைமுருகன்:
குறுக்கீடுகளுக்கு அமைச்சர்கள் விளக்கம் அளிப் பதை குறை சொல்லவில்லை. ஆனால், உறுப்பினர்களின் கன்னிப் பேச்சை பேசி முடித்ததும், விளக்கங்களை சொல்லுங்கள்.
எடப்பாடி பழனிசாமி:
நாங்கள் அமைதியாகத்தான் இருந்தோம். தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறியதால்தான் நாங்கள் பதிலளித்தோம்.
அமைச்சர் ஜெயக்குமார்:
இந்த அவையில், கடந்த 2006-ம் ஆண்டு அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது, முதல்வர் ஜெயலலிதா ஒருவராக வந்து அவையில் பேசினார். அவரது பேச்சில் 54 முறை நீங்கள் குறுக்கிட்டீர்களா இல்லையா?
இவ்வாறு விவாதம் நடந்தது.