வடபழனி–திருவான்மியூர், பெருங்குடி–சிறுசேரி: மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்

வடபழனி–திருவான்மியூர், பெருங்குடி–சிறுசேரி: மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்
Updated on
2 min read

வடபழனி - திருவான்மியூர் மற்றும் பெருங்குடி – சிறுசேரி என மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் தற்போது 2 வழித் தடங்களில் பறக்கும் பாதையாகவும், சுரங்க வழியாகவும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், வடபழனியில் இருந்து தியாகராய நகர் வழியாக திருவான்மியூர் வரை சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு 3-வது வழித்தடமும், திருவான்மியூர் அல்லது பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் (எம்.ஆர்.டி.எஸ்.) இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி வரை சுமார் 25 கி.மீ. தூரத்துக்கு 4-வது வழித்தடமும் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

கடும் போக்குவரத்து நெரிசல்

இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. தியாக ராய நகர் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் இருப்பதால், தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் 3-வது வழித்தடம் அவசியமாகிறது. அதேபோல, பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) 10 முதல் 15 மாடிகளுடன் பன்னடுக்கு குடியிருப்புகள் ஏராளமாக கட்டப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. அந்தப் பகுதியில் இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இதன் காரணமாக கடும் போக்கு வரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, இந்தப் பகுதியில் 4-வது மெட்ரோ வழித்தடம் அமைக்கலாம் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை அனுப்பியுள்ளது.

டெல்லியில் வாரியக் கூட்டம்

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாரியக் கூட்டம், டெல்லியில் கடந்த வாரம் நடந்தது. வாரிய தலைவரும், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக செயலாளருமான சுதீர் கிருஷ்ணா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் கே.ராஜாராமன், இயக்குநர்கள், தமிழக நிதித்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சென்னையில் மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே முதல்கட்டமாக மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. 10 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதையில், வரும் ஜூன் மாதம் மெட்ரோ ரயில் ஓடும். 2015-ம் ஆண்டு பறக்கும் பாதை முழுவதும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 2016-ம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் பாதை மற்றும் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் ஓடத் தொடங்கும்போது, மேலும் 2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கிவிடும். அதன்படி, 2016-ம் ஆண்டு இறுதியில் வடபழனி - திருவான்மியூர் இடையே தி.நகர் வழியாக சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு 3-வது வழித்தடம் சுரங்கப் பாதையாக அமைக்கப்படும். பனகல் பார்க்கில் பார்க்கிங், பூங்கா உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்.

அதேபோல திருவான்மியூர் அல்லது பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் தொடங்கி சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி வரை சுமார் 25 கி.மீ். தூரத்துக்கு 4-வது வழித்தடமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், 2 வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டம் வர இருப்பதால், மீதமுள்ள 6 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். 3 மற்றும் 4-வது மெட்ரோ வழித்தடங்களுக்கு டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in