

'மாதொருபாகன்' நாவலுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வர் கோயில் விழா குறித்து எழுத்தாளர் பெருமாள்முருகன் கடந்த 2010 ஆண்டில், 'மாதொருபாகன்' என்ற நாவல் எழுதியுள்ளார். இந்த நாவலின் செய்திகளை கருத்துரிமை, எழுத்துரிமைக்கு எதிரான சக்திகள் திரித்துக்கூறி, பதற்றத்தை உருவாக்கி அராஜக செயலில் ஈடுபட்டன.
இவர்களுக்கு சாதமாக அரசு நிர்வாகமும், காவல்துறையும் செயல்பட்டதால் எழுத்தாளர் பெருமாள் முருகன் பல்வேறு நிலைகளில் அவமதிக்கப்பட்டார். இறுதியில் அவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு எழுதி வாங்கப்பட்டது. இதனால் ‘எழுத்தாளர் பெருமாள்முருகன் செத்து விட்டான்’ என பெருமாள்முருகனே சமூக ஊடகத்தில் அறிவித்த அவலநிலை ஏற்பட்டது.
ஜனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் எதிராக செயல்பட்ட அரசு நிர்வாகம் மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 05.07.2016 அன்று வழங்கியுள்ள தீர்ப்பில் ''எழுத்தாளர் பெருமாள்முருகன் தொடர்பாக அரசு மற்றும் காவல்துறை தரப்பில் நடந்துள்ள தவறுகளை திருத்தியும், எதிர்காலத்தில் படைப்பாளிகளின் கருத்துரிமை, பேச்சுரிமை பாதுகாக்கப்பட 3 மாதத்தில் நிபுணர்குழு அமைக்க வேண்டும்'' என்று அறிவுறுத்தியும் விரிவான தீர்ப்பு வழங்கியிருப்பதை வரவேற்கிறோம்.
சார்பற்ற நடுநிலையோடு செயல்படும் தகுதிவாய்ந்த இலக்கியவாதிகளைக் கொண்டு நிபுணர்குழுவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம். சட்டப் போராட்டம் நடத்திய படைப்பாளிகளை பாராட்டுகிறோம்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.