

பொருளாதாரத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா சாலைக் கிராமத்தில் கார்ப்ரேசன் வங்கியின் 1850-வது கிளையை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் வங்கியின் சேர்மன் பன்சால், செயல் இயக்குநர் அமர்லால், பொது மேலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். சாலைகிராமம் கார்ப்ரேசன் வங்கியின் மேலாளர் மெய்ப்பொருள் வரவேற்றார்.
விழாவில், வங்கிக் கிளையை திறந்துவைத்து ப.சிதம்பரம் பேசியது:
சாலைகிராமம் கார்ப்ரேசன் வங்கி திறக்கப்பட்ட முதல்நாளே ரூ.6.2 கோடி வரவு செலவுடன் துவங்குகிறது. இதில், ரூ.5.60 கோடி வைப்பு நிதியாகும். மேலும், முதல் நாளே 60 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
நான் சிவகங்கை மாவட்டத்துக்கு, கடந்த 57 மாதங்களில் 87 முறை தொகுதிக்கு வந்துள்ளேன்.
கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத சார்பற்ற அரசாகும். ஆனால் சிலர் மதத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள் என்றார் அவர்.
பின்னர் 25 சுயநிதி உதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் கடனும், 10 பேருக்கு கல்விக்கடன் என சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை ப.சிதம்பரம் வழங்கினார்.