போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு வேல்முருகன் ஆதரவு

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு வேல்முருகன் ஆதரவு
Updated on
2 min read

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்களின் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தில் தமிழக தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம் பங்கேற்கும் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக வார்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நிர்வாகக் குளறுபடி மற்றும் நிதி நெருக்கடியால் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தள்ளாடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதனால் பொதுமக்களும் போக்குவரத்துத் தொழிலாளர்களும் என்றுமில்லாத அளவுக்குப் பாதிக்கப்படுகின்றனர்.

அதிலும் குறிப்பாக பணி ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் தீர்வு காணும் பொருட்டு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கவுள்ளனர். அதில் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கமும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கின்றன.

கிட்டத்தட்ட 60,000 ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வைப்புத்தொகை, பணிக்கொடை, ஓய்வூதியத்தொகை ஆகியவை மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் வழங்கப்படவில்லை.

அவர்களின் ஓய்வூதியமும் மாதத்தின் முதல் நாளில் அதாவது 1-ம் தேதியன்று வழங்கப்படுவதில்லை. 15-ம் தேதி, 20-ம்தேதி வழங்குகிறார்கள். அதுவும் பாதி தொகைதான். மீதித் தொகை வந்து சேர பல நாட்கள் ஆகும். இந்த மாதம் இதுவரை ஓய்வூதியம் வரவேயில்லை.

இதற்காக பலமுறை போராட்டம் நடத்தியும் பலனில்லை. பணியில் உள்ள ஒன்றரை லட்சம் தொழிலாளர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படும். 12ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அப்படியிருந்தும் 13ஆவது ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையைக்கூட இன்னும் தொடங்கவில்லை. அவ்வளவு ஏன், 12ஆவது ஒப்பந்தத்திலுள்ள பெரும்பாலான கோரிக்கைகளைக்கூட இன்றுவரை நிறைவேற்றவில்லை.

தினக்கூலி அடிப்படையிலான ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையோ அவலத்திலும் அவலம். அவர்களை நிரந்தரம் ஆக்காததோடு தினக்கூலியாக அவர்களுக்கு ரூ.671 வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைக்கூட நடைமுறைப்படுத்தவில்லை. ரூ.256தான் வழங்கப்படுகிறது.

வரி செலுத்தியே அரசின் சேவையைப் பெற்றுவரும் பொதுமக்களின் நிலையும் பரிதாபம்தான். நேரத்திற்கு பேருந்து சேவை இல்லை. ஓட்டை உடைசலான பேருந்துகள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பழுதடைந்து பாதிவழியிலேயே நின்றுவிடலாம். டீலக்ஸ் பஸ்களாக விட்டு அதிகப் பணம் பிடுங்குதல் வேறு. பெட்ரோல் – டீசலுக்கும் வாட் வரியை உயர்த்தி அதன் மூலம் பஸ் கட்டணத்தையும் உயர்த்தி வாக்களித்த மக்களையே வாட்டி வதைக்கும் கொடுமை.

இத்தகைய நிலைகளுக்கெல்லாம் காரணமாக, போக்குவரத்துத் துறை 35 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருப்பதாகவும் ஒரு நாளுக்கு 6.58 கோடி ரூபாய் என்ற கணக்கில் ஆண்டுக்கு 2,400 கோடி ரூபாய் இழப்பைச் சந்திப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே இப்படியான நெருக்கடியில் சிக்கியிருப்பதால், போக்குவரத்துத் துறைக்கென்று பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்குமாறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக அரசு அதை காதில் வாங்கிக் கொள்வதாகவே தெரியவில்லை.

இதனால் போக்குவரத்துத் துறைக்கு 5,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இந்த வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து அனைத்து சங்கங்களும் பங்கேற்கின்றன. தமிழக தொழிலாளர் வாழ்வுரிமை சங்கமும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தோழமை சங்கங்களுடன் இணைந்து களம் காணும்'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in