Published : 18 May 2017 08:04 AM
Last Updated : 18 May 2017 08:04 AM

கோவை வனக் கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: ஜிபிஎஸ் உதவியுடன் எண்ணிக்கை பதிவு

கோவை மாவட்டத்தில் உள்ள 690 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாட கம் ஆகிய 4 மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கி ணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. யானைகள் பெருக் கம் அதிகமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்த கணக்கெடுப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. அதில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியாக உள்ள கோவை மாவட்டத்தில் 690 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பை 24 பகுதிகளாக பிரித்து தொடர்ந்து 3 நாட்களுக்கு இக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கோவை வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்களில் யானைகள் அடர்த்தி அதிகமாக உள்ள மேட்டுப்பாளையம், சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை ஆகிய சரகங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் யானைகள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று வகை

கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது: வழக்கமாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது போலவே இந்த ஆண்டும் கணக்கெடுப்பு நடக்கிறது. வழக்கமாக கடந்த காலங்களில் வனச் சூழலை அறிந்து கொள்ள ஏதுவாக தன்னார்வலர்களுக்கு வாய்ப்பளிக்கப் படும். ஆனால் இந்த ஆண்டு யானை கள் பெருக்கம் அதிகமாக இருப்பதால் 6 தன்னார்வலர்கள் மட்டுமே அனுமதிக் கப்பட்டுள்ளனர். இதுதவிர வனக்கல் லூரியில் பயிற்சி பெறும் ஊழியர்களை யும், வனத்துறையினரையும் சேர்த்து 80 பேர் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் நாளில், வனப்பிரிவு வாரியாக சராசரியாக 1500 ஹெக்டேருக்கு நேரடிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதில் விலங்குகள் எண்ணிக்கை, நேரம், இடம் உள்ளிட்டவை ஜிபிஎஸ் உதவியுடன் பதிவு செய்யப்படும். இரண் டாம் நாளில் யானைகள் சாணத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 2 கி.மீ. வரையுள்ள நேர்கோட்டுப் பாதையில் கணக்கெடுப்பு நடத்தப்படும். இது முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு. மூன்றாவது நாளில் வனத்தினுள் உள்ள நீர்நிலைகளில் கணக்கெடுப்பும், புகைப்படப் பதிவு செய்யப்படும். அதில் யானைகள் பெருக்கம், குட்டியானைகள் எண்ணிக்கை, உடல்நிலை, இனப்பெருக்கச் சூழல் உள்ளிட்டவை நேரடியாக பதிவு செய்யப்படும். மூன்று நாட்களில் கிடைக்கும் முடிவுகள் தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். கணக்கெடுப்பு இறுதி முடிவுகள் ஓரிரு மாதங்களில் வெளியாகும்.

கோவையைப் பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 25 பெண் யானைகளுக்கு 1 ஆண் யானை என்றிருந்த நிலை மாறி, தற்போது 5 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை என்ற அளவுக்கு ஆண் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x