

ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்பது குறித்து தெரிவிக்கும் வகையில் தற்போதே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஜூலை 1 முதல் அமல்படுத்தப் படும் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏசி, ஏசி இல்லாத தங்கும் விடுதியுடன் கூடிய ஹோட்டல்கள், நகர்ப்புற, கிராமப்புற சிறிய ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் உள்ள ஹோட்டல்களில் 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை வரி உயர வாய்ப்புள்ளது.
இதைக் கண்டித்து தமிழகத்தில் கடந்த வாரம் ஹோட்டல்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டன. ஆனாலும், மத்திய அரசு இந்த வரி விதிப்பில் இருந்து பின்வாங்காததால் ஹோட்டல் களில் உணவுப் பொருட்கள் மீதான வரி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஜூலை 1-ம் தேதி முதல் உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி தொடர்பான விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூறிய தாவது: சிறிய ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தற்போது வரி விதிக்கப்படுவதில்லை. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தால், சிறிய ஹோட்டல்களில் 5 சதவீத வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏசி இல்லாத ஹோட்டல்களில் தற்போது 2 சதவீதமாக உள்ள வரி, 12 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது. ஏசி உணவகங்களில் தற்போது 8 சதவீதமாக உள்ள வரி, 18 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது.
இதனால், ஜூலை 1-ம் தேதி முதல் உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதன் காரணமாக ஹோட்டல்களில் வியாபாரம் குறைய வாய்ப்புள்ளது. சிறு ஹோட்டல்களில் பில் அளிக்கும் முறை தற்போது இல்லாததால், இந்த வரி உயர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார்.