

புகழ்பெற்ற தப்பாட்டக் கலைஞர் தஞ்சாவூர் ரங்கராஜனின் மறை வுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமைப்பின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல் வன், பொதுச் செயலாளர் சு.வெங்க டேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தின் புகழ்பெற்ற தப்பாட்டக் கலைஞர் தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ரங்கராஜன்(54) நேற்று முன்தினம் காலமானார். தஞ்சை பகுதிகளில் துக்க வீடுகளில் மட்டுமே இசைக் கப்பட்டு வந்த பறையிசையை, அதிலிருந்து மீட்டெடுத்து பொது சமூகத்தின் பயன்பாட்டுக்கு ஒரு கலைவடிவமாக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர் இவர்.
தப்பாட்டத்துக்கான புதிய ஆட்ட முறையையும் அடவுகளை யும் உருவாக்கி வெகுமக்களின் ரசனைக்கு கொண்டுவந்தவர். தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு இக் கலையைப் பயிற்றுவித்தவர். சிங்கப்பூர், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் என உலக நாடுகளிலும் தமிழர்களின் தொல் இசையை ஒலிக்கச் செய்தவர்.
தமிழக அரசு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்கும் கலை மாமணி, கலைச்சுடர் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்ற ரங்கராஜனின் மறைவு முற்போக்கு கலை உலகுக்கு பெரும் இழப்பு எனத் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் காலமான ரங்கராஜனின் உடல், நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவி மணிமொழி, மகன்கள் ராஜ்குமார் (தப்பாட்டக் கலைஞர்), வினோத்குமார் உள்ளனர்.