வட தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வட தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு  மையம் எச்சரிக்கை
Updated on
1 min read

வட தமிழகத்தில், அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரம் அடைந்து வடதமிழ்நாடு நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை – நாகை இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும், இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ரமணன் கூறியதாவது:– நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு தென் கிழக்கே 650 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கும், நாகைக்கும் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக 15–ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு முதல் 16–ந்தேதி வரை கன மெழை பெய்யும். காற்றும் 60 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்தில் வீசும். கடல் பயங்கர கொந்தளிப்பாக இருக்கும்.

எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். தாழ்வு மண்டலம் வலுவாக இருப்பதால் அதிக சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு ரமணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in