Published : 27 May 2017 10:42 AM
Last Updated : 27 May 2017 10:42 AM

கோடை விடுமுறையில் கோயில் சீரமைப்பு, மரம் வளர்ப்பில் ஈடுபடும் சிறுவர்கள்: பயனுள்ள பணியில் ஈடுபட்டுள்ளதாக பெருமிதம்

கோடை விடுமுறையை வீணாக கழிக்காமல் கோயில் சீரமைப்பு, மரம் வளர்ப்பு என தாங்கள் வசிக்கும் கிராமத்தை சீரமைக்கும் பயனுள்ள பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் அருமடல் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள்.

பெரம்பலூர் மாவட்டம் அருமடல் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள் சிலர் கோடை விடுமுறையில் அந்த கிராமத்தில் பராமரிக்கப்படாமல் இருந்த பழமையான சிவன் கோயிலில் உள்ள புதர்களை அகற்றி, சுத்தம் செய்து சீரமைத்து வருகின்றனர். மேலும், கோயிலைச் சுற்றி பயனுள்ள மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். அவற்றுக்கு ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண் எடுத்து வந்து ஊட்டம் தருகின்றனர். ஊரில் ஆங்காங்கே அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களையும், செடிகளையும் அகற்றி வருகின்றனர்.

அருமடல் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் எனும் 9-ம் வகுப்பு மாணவர், ஊரில் உள்ள சக சிறுவர்களை இணைத்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து தினேஷ் கூறும்போது, “புதிய பயணம் நண்பர்கள் எனும் குழுவினர் எங்கள் ஊரில் செங்காமுனியார் கோயில் அருகில் மரக் கன்றுகள் நட்டு வளர்த்து வருகின்றனர். மே 7-ம் தேதி அவர்கள் இதற்கான விழாவை நடத்தினர். அவர்களின் செயலைப் பார்த்த எனக்கு, நாமும் இதுபோல ஏதேனும் நல்ல காரியம் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. இதையடுத்து, ஊரிலுள்ள எனது பள்ளித் தோழர்கள், நண்பர்கள் ஆகியோரது உதவியுடன் சிவன் கோயில் வளாகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, சுத்தம் செய்யவும், ஊரில் தேவைப்படும் இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும், சுற்றுச் சூழலுக்கு தீமை உண்டாக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றவும் முடிவு செய்து, மே 18-ம் தேதி முதல் இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம். கோடை விடுமுறையின் ஆரம்ப நாட்களிலேயே இந்த சிந்தனை எங்களுக்கு வந்திருந்தால், கூடுதலாக சில நற்பணிகளை செய்திருக்க முடியும். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் மேலும் பல்வேறு பணிகளை செய்வோம்.

எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ், அபிஷேக், சதீஸ், னிவாசன், முரளி, ஆகாஷ், மாதவன், அருண், அரவிந்த், கதிரேசன் ஆகியோர் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்” என்றார் .

இந்த சிறுவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் நாட்களில் செடிகளை கவனிப்பாரின்றி விட்டுவிடக்கூடாது என்பதற்காக, தினமும் காலை நேரத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய பிறகே பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளனர் இந்த சிறுவர்கள்.

சிறுவர்களின் சீரிய பணி தொடரட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x