வெளிநடப்பு செய்தாலும் பேரவை நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்கிறோம்: ஸ்டாலின் விளக்கம்

வெளிநடப்பு செய்தாலும் பேரவை நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்கிறோம்: ஸ்டாலின் விளக்கம்
Updated on
2 min read

சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தாலும் மீண்டும் அவைக்கு திரும்பி விவாதங்களில் முழுமையாக பங்கேற்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சட்டப்பேரவையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது. ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற பேரவைத் தலைவருக்கு முழுஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஆனால், அதிமுக ஆட்சியில பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்பினால் அவற்றுக்குப் பொறுப்பான பதில்கள் கிடைப்பதில்லை.

கடந்த 14-ம் தேதி பேரவை தொடங்கியதும், அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான வீடியோ குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தினோம். இதனை ஏற்காத பேரவைத் தலைவர், ஒட்டுமொத்த திமுக உறுப்பினர்களையும் அவையை விட்டு வெளியேற்றினார். கூட்டத் தொடரின் முதல் நாளே ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். முதல் நாள் நடந்தது வெளியேற்றமே தவிர, நாங்கள் வெளிநடப்பு செய்யவில்லை.

மறுநாள் 15-ம் தேதியும் பண பேரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி கேட்டும் பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார். அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்துவிட்டு மீண்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்றோம்.

கூட்டத் தொடரின் 3-வது நாளான 16-ம் தேதி பண பேர பிரச்சினையை எழுப்பி, அதற்கான ஆதாரத்தை கொடுத்தேன். அதனை ஏற்க மறுத்த பேரவைத் தலைவர் நான் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார். இந்தப்போக்கை கண்டித்து வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் அவைக்கு திரும்பினோம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ரூ. 89 கோடி விநியோகம் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வழக்குப் பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே, வெளிநடப்பு செய்து விட்டு, மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றோம்.

கடந்த 20-ம் தேதி மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைக் கண்டித்து தனி தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினோம். அதற்கு பதிலளித்த முதல்வர் கே.பழனிசாமி, மத்திய அரசின் சட்டத்துக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் அவைக்கு வந்தோம்.

பண பேரம் தொடர்பாக வெளியான வீடியோ குறித்து திமுக சார்பில் ஆளுநரிடம் மனு அளித்தோம். அந்த மனு விவரங்களை தலைமைச் செயலாளர் மற்றும் பேரவைத் தலைவருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை பேரவையில் படித்துக் காட்ட வேண்டும் என வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்து, மீண்டும் பேரவைக்கு திரும்பினோம்.

இவ்வாறு மக்கள்நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு வெளிநடப்பு செய்துவிட்டு சிறிது நேரத்தில் பேரவைக்கு திரும்பி விவாதங்களில் முழுமையாக பங்கேற்று வருகிறோம். ஆனால், ஒருசில ஊடகங்கள் திமுக வெளிநடப்பு மட்டுமே செய்து கொண்டிருக்கிறது என்பதுபோல செய்திகள் வெளியிடுகின்றன. ஊடகங்களில் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in