

பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக மாறிப்போன சுற்று ச்சாலையில் செல்வதற்கு அஞ்சி நெருக்கடி மிகுந்த மதுரை நகர் வழியாக தென் மாவட்டங்களுக்கு வாகனங்கள் பயணிக்கத் தொடங் கியுள்ளன.
மதுரை நகருக்குள் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கவும், மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் மதுரைக்குள் வராமல் தென் மாவட்டங்களுக்கு செல் வதற்கு வசதியாகவும் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரை 27 கி.மீ தூரத்துக்கு 1999-ம் ஆண்டில் சுற்றுச்சாலை அமைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் டோல்கேட் அமைத்து தென் மாவட்டங்களிலிருந்து வந்து, செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இப்பணத்தில் ஒரு பகுதி சுற்றுச்சாலை பராமரிப்புக்கு செல விடப்பட்டது.
இந்நிலையில் சுற்றுச்சாலையில் காலக்கெடுவுக்குப் பிறகும் டோல் கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதனால் 4 டோல் கட்டண மையங்களும் நிரந்தரமாக மூடப்பட்டன.
வருமானம் வந்தவரை சுற்று ச்சாலையை தன்வசம் வைத் திருந்த மாநகராட்சி, வருமானம் நின்றுவிட்ட நிலையில் சாலை பராமரிப்பு பணியை முற்றிலும் நிறுத்திவிட்டு சாலையை மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிட்டது.
இதனால் கடந்த 2 ஆண்டு களாக பராமரிப்பு ஏதுவும் இல்லாததால், உயிர் பலியை ஏற்படுத்தும் குண்டும், குழியுமான சுற்றுச்சாலை பரிதாபமாக காட்சியளிக்கிறது. கடந்த வாரம் சுற்றுச்சாலையில் இருந்த பள்ளத்தால் தனியார் பஸ் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சுற்றுச்சாலையில் பயணம் செய்து விபத்தில் சிக்குவதை தவிர்க்க தென் மாவட்டங்களிலிருந்து வந்து செல்லும் வாகனங்கள் மதுரை நகர் வழியாக செல்லத் தொடங்கியுள்ளன.
மதுரையிலிருந்து திருவன ந்தபுரம், கன்னியாகுமரி, நாகர் கோவில், நெல்லை, கோவில்பட்டி தூத்துக்குடி, விருதுநகர், ராஜ பாளையம், தென்காசி செல்லும் பஸ்களும், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல் லும் பஸ்களும் சுற்றுச்சாலை வழியாகவே செல்ல வேண்டும். இந்த பஸ்கள் மதுரை நகருக்குள் வருவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. தற்போது சுற்றுச்சாலை படுமோசமாக இருப்பதால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இரவு நேரங்களில் மதுரை நகர் வழியாக செல்கின்றன. கடந்த வாரம் இரவில் நகர் வழியாக சென்ற நாகர்கோவில் பஸ் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இது குறித்து அரசு போக்கு வரத்து கழக நெல்லை கோட்ட ஓட்டுநர் ஒருவர் கூறியதாவது: சுற்றுச்சாலை வழியாக திருமங்கலம் செல்ல 40 நிமிடம் ஆகும். நகருக்குள் வந்து சென்றால் பயண நேரம் 10 நிமிடம் குறையும். சுற்றுச்சாலையில் செல்லும்போது வாகனங்கள் தூக்கியடிப்பதால் பல நேரங்களில் வாகனங்களின் உதிரிபாகங்கள் கழன்று விழுகின்றன. அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகின்றன. சுற்றுச்சாலையை சீரமைப்பது தான் இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்கும் என்றார்.
தனியார் வாகன ஓட்டுநர் நீலகண்டன் என்பவர் கூறியதாவது:
‘சென்னையில் இருந்து மதுரை வரை நான்கு வழிச்சாலையில் விரைவாக பாதுகாப்பாக வருகிறோம். சென்னை- மதுரை வரையிலான பயண சுகத்தை மதுரை- கப்பலூர் இடையிலான 27 கி.மீ தூர சுற்றுச்சாலை பயணம் கெடுத்துவிடுகிறது. உயிர் பயத்துடன்தான் சுற்றுச்சாலையை கடக்க வேண்டியதுள்ளது என்றார்.