சட்டப்பேரவையில் திமுகவினர் மீது ஆளும் கட்சி விமர்சனம்: ஸ்டாலின் காட்டம்

சட்டப்பேரவையில் திமுகவினர் மீது ஆளும் கட்சி விமர்சனம்: ஸ்டாலின் காட்டம்
Updated on
2 min read

''89 வயக்காட்டு பொம்மைகள் என அதிமுகவினர் சட்டசபையில் பேசுவது சரியென்றால் நான் பதில் தருவதில் என்ன தவறு உள்ளது'' என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும், சட்டசபையை முறைப்படி நடத்த வேண்டிய சபாநாயகரே சர்வாதிகார மனப்பான்மையுடன் அவை முடங்குவதற்கு காரணமாக இருக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில்பேசிய அதிமுக உறுப்பினர் முத்தையா, திமுகவினரை 89 வயக்காட்டு பொம்மைகள் என விமர்சனம் செய்தார். இதை எதிர்த்தும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரியும் திமுகவினர் அமளியில் ஈடுபட, சட்டப்பேரவை முடங்கியது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

''இன்று மின்துறை சம்பந்தமான மானியக் கோரிக்கை விவாதத்தில் திமுக சார்பில் எங்களுடைய உறுப்பினர்கள் ரங்கநாதன் மற்றும் எ.வ.வேலு ஆகியோர் உரையாற்றினார்கள். தொடர்ந்து நாங்கள் விவாதத்தில் பங்கு பெற வேண்டும், அந்தத் துறையினுடைய அமைச்சர் சொல்லக் கூடிய பதிலையும் பொறுமையாக இருந்து கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் அவையில் பங்கேற்றோம். ஏற்கெனவே சபாநாயகருடைய ஒரு தீர்ப்பை கண்டிக்கும் வகையில் நாங்கள் வெளிநடப்பு செய்திருந்தாலும் தொடர்ந்து மீண்டும் நாங்கள் அவைக்குள் சென்று சபை நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.

அப்படிப்பட்ட நிலையில் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வேண்டுமென்றே திட்டமிட்டு, 89 வயக்காட்டு பொம்மைகள் என்று அவையில் பேசுகிறார். எங்களை மையப்படுத்தி, எங்களை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நிலையில் அவர் அப்படி பேசியபோது நாங்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தோம்.

அப்போது அவையில் முதல்வர் ஜெயலலிதா உடனே எழுந்து, ''அது ஒன்றும் அன்பார்லிமெண்ட் வார்த்தை அல்ல, அவைக் குறிப்பிலிருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்று கூறினார்.

ஆனால் நாங்கள் கடைசி வரையில் அதை அவைக் குறிப்பிலே இருந்து நீக்க வேண்டும் என்று மன்றாடினோம், சபாநாயகரிடத்தில் உரிமையோடு கேட்டோம். ஆனால், ''அதை பதிவு செய்து விட்டேன், எனவே நீக்கமுடியாது'' என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

அதன்பிறகு, எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று அவரிடம் வாதாடி, போராடிய பிறகு எனக்கு அனுமதி கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் பேசியபோது, ''89 வயக்காட்டு பொம்மைகள் என்று ஒரு அதிமுக உறுப்பினர் பேசுவது அவைக் குறிப்பிலே இருக்கலாம் எனச் சொல்கிறீர்கள், எனவே நான் கூறியதும் அவையின் பதிவில் இருக்க வேண்டும் எனச் சொன்னபோது, அவர்கள் உடனே அவைக் குறிப்பிலே இருந்து நீக்குகிறார்கள். இது என்ன நியாயம் ?

நீக்கினால் அதிமுக உறுப்பினர் பேசியதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நான் பேசியதையும் நீக்க வேண்டும். ஆனால் அது அவைக் குறிப்பிலே இருக்கிறபோது நான் பேசியதில் என்ன தவறு ? அதை ஏன் நீக்க வேண்டும் ?

நான் யாரையும் பெயரைச் சொல்லி விமர்சனம் செய்து பேசவில்லை. அவர்களும் அப்படி பேசவில்லை என்று சொல்லி தான் சபாநாயகர் தீர்ப்பு தந்தார். எனவே அந்த தீர்ப்பு தானே இதற்கும் பொருந்தும் ?

நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். ஆக அந்த சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள நாங்கள் கடைசி வரை போராடினோம். ஆனால், கடைசிவரையில் சபாநாயகர் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடவில்லை. கடைசியில் அவர் வேறு வழியில்லாமல் சபையை ஒத்தி வைத்து விட்டு போயிருக்கிறார் என்பது உள்ளபடியே வேதனைக்குரியது.

அமைச்சர் நியாயமாக பதில் சொல்லியிருக்க வேண்டும். சபாநாயகர் முறையாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு சுமுகமாக ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனவே, ஒரு சர்வாதிகார மனப்பான்மையோடு, முதல்வர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படக்கூடிய ஒரு சபாநாயகராக, சர்வாதிகாரம் பிடித்திருக்கக் கூடிய சபாநாயகராக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

தினமும் சட்டப்பேரவை பல மணி நேரம் முடக்கப்படுகிறது என்றால், அதற்கு முழுக்க முழுக்க சபாநாயகர்தான் காரணம்'' என்று ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in