

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரளாவில் பெய்துவரும் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து சுமார் 35 ஆண்டு
களுக்குப் பிறகு இப்போதுதான் அணை நீர்மட்டம் நவம்பர் 5-ம் தேதி நிலவரப்படி 138 அடியை எட்டியுள்ளது. நீர்மட்டம் உயர்வதால் அணைப் பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களது பாதுகாப்பு கருதி நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கேரள அதிகாரிகள் உச்ச நீதிமன்றக் குழுவிடம் கோரினர். ஆனால் கேரளாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் நமக்கு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி நீரைத் தேக்குவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நேரம் கனிந்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு நவம்பர் 5-ம் தேதி வரை 456 கன அடி நீரைக் குடிநீருக்காக வெளியேற்றி வந்ததற்கு மாறாக, அந்த அளவை அதிகப்படுத்தி 6-ம் தேதி 1,816 கன அடி நீரை உடனடியாக வெளியேற்றுவதன் காரணம் என்ன? நீர்வரத்து 1973 கன அடியாக இருக்கும் நேரத்தில் தண்ணீரை அதிகப்படியாக வெளியேற்றுவதன் மூலம், இந்த அரசுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த விருப்பமில்லையோ என்று அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் மற்றும் அங்கேயுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கருதுகிறார்களாம். மிக முக்கியமான விவசாயம், குடிநீர் தொடர்பான இந்த பிரச்சினை பற்றி அதிமுக அரசு இதுவரை விளக்கவில்லை.
பாம்பாற்றின் குறுக்கே அணைதிருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் அமராவதி ஆற்றின் மூலம் 26 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகிறது. அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களில், கேரளாவில் இருந்து வரும் பாம்பாற்றின் பங்குதான் அதிகம். இந்நிலையில் இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கேரள முதல்வர் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அப்பகுதியில் உள்ள தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே இந்த முயற்சியைத் தடுக்க, மத்திய அரசு மூலமாக தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், போகலாம். ஆனால் அரசு நிலையானது. அது தேங்காமல் இயங்க வேண்டும். எனவே மக்கள் நலனைப் பாதுகாக்க தமிழக அரசு இயங்க முன்வர வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.